வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நெல்லை பெண் டாக்டரிடம் ரூ.30 ஆயிரம் அபேஸ்


வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நெல்லை பெண் டாக்டரிடம் ரூ.30 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 18 April 2017 4:45 AM IST (Updated: 18 April 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து டாக்டரிடம் ரூ.30 ஆயிரத்தை வசூல் செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை,

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

வருமான வரித்துறை அதிகாரிகள்

நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு ஒரு காரில் நேற்று 6 பேர் டிப்–டாப்பாக வந்து இறங்கினர். அவர்கள் 6 பேரும் தாங்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறினார்கள். பின்னர் ஆஸ்பத்திரி எதிரே உள்ள வீட்டில் இருந்த டாக்டர் ராமலெட்சுமியை சந்தித்து தாங்கள் வந்த விவரத்தை கூறினர். கடந்த ஆண்டு ஆஸ்பத்திரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கில் குழப்பங்கள் உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் என்றால் ரூ.1 லட்சம் தர வேண்டும் என்று கேட்டனர்.

அதற்கு டாக்டர் ராமலெட்சுமி, அவருடைய மகனும், மருமகளும் வெளியே சென்றிருக்கிறார்கள். எனவே அவர்கள் வந்த உடன் மற்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார். மேலும் வருமான வரி விவரங்களை பட்டய கணக்காளரே (ஆடிட்டர்) பராமரித்து தாக்கல் செய்து உள்ளார் என்று தெரிவித்தார்.

ரூ.30 ஆயிரம்

ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகளாக வந்தவர்கள், பணம் கேட்டு மிரட்டினர். அப்போது டாக்டர் தன்னிடம் ரூ.30 ஆயிரம் மட்டுமே கைவசம் இருப்பதாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து, அவர்கள் கிடைத்த பணம் போதும் என்று ரூ.30 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு அங்கிருந்து வேகமாக கிளம்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து டாக்டர் தன்னுடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து நடந்த விவரத்தை கூறினார். அவர்கள் நெல்லை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு டெலிபோன் மூலம் பேசி தகவல் கேட்டனர். வருமான வரித்துறை அலுவலகம் சார்பில் யாரும் தங்களது ஆஸ்பத்திரிக்கு வரவில்லை என்று பதில் அளித்தனர். அப்போதுதான் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து பணத்தை பெற்றுச் சென்ற விவரம் தெரியவந்தது.

வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் சார்பில் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். நெல்லை மாநகர போலீஸ் டவுன் உதவி கமி‌ஷனர் மாரிமுத்து மற்றும் போலீசார், ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் வசூலித்து விட்டு சென்ற கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story