பழுதான மின்விசிறியை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
பழுதான மின்விசிறியை சரி செய்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்
விழுப்புரம் மாவட்டம் சாணிமேடு கிராமம் பெரியபிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம்(வயது 31). இவருடைய மனைவி சித்ரா(23). இவர்களுக்கு லிவேஸ்ரீ(6), நித்யஸ்ரீ(3), யுவதாரிணி(11 மாதம்) என 3 மகள்கள் உள்ளனர்.
கணவன்–மனைவி இருவரும் கடந்த 3 மாதங்களாக திருவள்ளூரை அடுத்த வயலாநல்லூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலிநேற்று முன்தினம் வேலாயுதம் வீட்டில் உள்ள மின்விசிறி பழுதானது. இதனால் காற்றுக்காக குழந்தைகளுடன் சித்ரா, பக்கத்து வீட்டில் தூங்க சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த வேலாயுதம், பழுதான மின்விசிறியை சரி செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது மின்சாரம் தாக்கியதில் வேலாயுதம் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான வேலாயுதத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த கருநீலம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன்(58). விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை தனது விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்கிய போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், வரதராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.