வெங்கல் அருகே மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் 91 பேர் கைது


வெங்கல் அருகே மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் 91 பேர் கைது
x
தினத்தந்தி 18 April 2017 5:00 AM IST (Updated: 18 April 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பெண்கள் உள்பட 91 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரியபாளையம்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே உள்ள கன்னிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிக்குப்பம் கிராமத்தில் பூச்சி அத்திப்பேடு–ஆவடி நெடுஞ்சாலையில் நேற்று புதிதாக மதுக்கடை திறக்க மதுபாட்டில்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டது.

குடியிருப்பு, கோவில், தேவாலயங்களுக்கு அருகில் உள்ள இந்த மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் பூச்சி அத்திப்பேடு–ஆவடி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

91 பேர் கைது

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் கடையை மூடுவதாக எழுதி கொடுத்தால்தான் போராட்டத்தை கைவிடுவதாக கூறிய பொதுமக்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 42 பெண்கள், 49 ஆண்கள் என மொத்தம் 91 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் பூச்சி அத்திப்பேடு–ஆவடி நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story