தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதி பொதுமக்கள், தூத்துக்குடி ஒன்றிய குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து கோரம்பள்ளத்தில் இருந்து பொதுமக்கள் காலி குடங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட கலெக்டர் ரவிகுமாரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.
அந்த மனுவில், தூத்துக்குடி ஒன்றியம் கோரம்பள்ளம் பஞ்சாயத்தில் உள்ள சீனிவாசநகர், ராஜபாண்டிநகர், கர்மேல்நகர், குறிஞ்சிநகர், மணிநகர், பியூலாநகர், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த 40 நாட்களாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த பகுதி பொதுமக்களுக்கு விரைவில் தண்ணீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தது.
குடோன்தூத்துக்குடி ஆம் ஆத்மி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி தெய்வசெயல்புரம் மற்றும் சித்தார்குளம் அருகே உள்ள வெடி மருந்து குடோனை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி மாநகரில் ஜெயராஜ் சாலையில் இருந்து தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மதுபான கடைவிளாத்திகுளம் தாலுகா மேட்டுப்பட்டி, சித்தவநாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள் கொடுத்த மனுவில், மேட்டுப்பட்டி, சித்தவநாயக்கன்பட்டி கிராமங்களில் 600 குடும்பங்கள் உள்ளன. தற்போது மேட்டுப்பட்டி ஊருக்கு தெற்கு பகுதியில் டாஸ்மாக் கடை அமைய உள்ளது. மதுகடை அமைய உள்ள இடம் குடியிருப்பு பகுதிக்கு 50 மீட்டருக்குள் உள்ளது. மதுக்கடை அங்கு அமைந்தால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே அங்கு டாஸ்மாக் கடை அமைக்க அனுமதிக்க கூடாது என்று கூறி இருந்தனர்.
அதேபோல், முக்காணி கிராமம் ஜெயராமசந்திரபுரம் பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இதனால் எங்கள் பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைய அனுமதிக்க கூடாது என்று கூறி இருந்தனர்.