விவசாயிகள் முண்டியடித்து வந்ததால் கலெக்டர் அலுவலக கதவு மூடப்பட்டது


விவசாயிகள் முண்டியடித்து வந்ததால் கலெக்டர் அலுவலக கதவு மூடப்பட்டது
x
தினத்தந்தி 18 April 2017 4:30 AM IST (Updated: 18 April 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின்போது மனு கொடுக்க விவசாயிகள் முண்டியடித்து வந்ததால் கலெக்டர் அலுவலக கதவு மூடப்பட்டது. இதனால் பொது மக்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ் தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள். அப்போது தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சங்க தலைவர் சின்னதுரை தலைமையில் திரண்டு வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் கையில் கோரிக்கை மனு வைத்து இருந்தனர்.

எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணை கட்டவேண்டும், மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு அறிவித்து உள்ள ஒற்றை தீர்ப்பாயத்தை கைவிட்டு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

கதவு மூடப்பட்டது

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து கொண்டிருந்த அரங்கின் வாசல் அருகில் விவசாயிகள் வந்ததும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். சின்னதுரை மற்றும் இருவரை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்தனர். மற்ற அனைவரையும் போலீசார் உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். அப்போது விவசாயிகள் முண்டியடித்துக்கொண்டு வந்ததால் கதவை இழுத்து மூடினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மனு கொடுக்க வந்த மற்ற பொதுமக்களும் உள்ளே செல்ல முடியாமல் தவித்தார்கள்.

அதிகாரி முன் தர்ணா

அப்போது விவசாய சங்க தலைவர் சின்னதுரை மாவட்ட வருவாய் அதிகாரி முன் தரையில் அமர்ந்து தர்ணா செய்தார். எல்லா விவசாயிகளும் தனிப்பட்ட முறையில் மனு கொடுக்க வந்து உள்ளனர். அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோஷம் போட்டார். இதனை தொடர்ந்து போலீசார் வேறு வழியில்லாமல் கதவை திறந்து விட்டனர். அதன் பின்னர் விவசாயிகள் வரிசையாக வந்து மனு கொடுத்து விட்டு சென்றனர்.

மனு நீதி சோழனிடம் மனு

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழக்காவட்டாங்குறிச்சியை சேர்ந்த விவசாயி தங்க சண்முக சுந்தரம் என்பவர் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க கோரி மனு நீதி சோழனிடம் மணியடித்து மனு கொடுப்பது போன்ற ஒரு நூதன போராட்டத்தை நடத்தினார். கொளுத்தும் வெயிலில் தரையில் படுத்துக்கொண்டு, மன்னர் போல் வேடம் அணிந்திருந்த ஒரு சிறுவனிடம் மனு கொடுப்பது போல் அவர் செய்ததை ஏராளமானவர்கள் பார்த்து சென்றனர். பலமுறை மனு கொடுத்தும் பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் இப்படி ஒரு போராட்டத்தை நடத்தியதாக கூறிய அவர், பின்னர் அதிகாரிகளிடம் மனு கொடுத்து விட்டு சென்றார்.

மாவட்ட மறுவாழ்வு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் அளிப்பதற்கான டாக்டர் இல்லை, இதனால் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கிறார்கள். இதுபற்றி விசாரணை நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரி வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர் மனு கொடுத்தனர்.


Next Story