ஜெர்மனி பெண் கற்பழிப்பு வழக்கில் 2 வாரங்களாக துப்பு கிடைக்காததால் போலீசார் ஏமாற்றம்
ஜெர்மன் நாட்டு பெண் கற்பழிப்பு வழக்கில் 2 வாரங்களாகியும் குற்றவாளிகள் பற்றி துப்பு கிடைக்காமல் போலீசார் கவலையடைந்துள்ளனர்.
மாமல்லபுரம்
ஜர்மனி நாட்டை சேர்ந்த ஜெசீனா (வயது 35) என்ற பெண் 2 வாரங்களுக்கு முன்பு மாமல்லபுரத்துக்குசுற்றுலா வந்தார். அப்போது மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் என்ற இடத்தில் கடலில் குளித்து விட்டு ஓய்வு எடுத்து கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் 2 பேர் அவரை அருகில் உள்ள சவுக்கு தோப்புக்கு தூக்கிச் சென்று கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட் மேற்பார்வையில் மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், தாழம்பூர் ராஜாங்கம் உள்ளிட்ட தனிப்படை போலீசார் தனித்தனி குழுக்களாக பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் ஏமாற்றம்தற்போது வடமாநிலங்களில் சுற்றுலா மேற்கொண்டுள்ள ஜெர்மனி நாட்டு பெண்ணுக்கு அவ்வப்போது குற்றவாளிகள் பற்றி அடையாளம் காண்பதற்காக ‘வாட்ஸ் அப்’ மூலம் போலீசார் தகவல் அனுப்பி, அவரது பதிலை பெற்றனர். சம்பவம் நடந்த சவுக்கு தோப்பு பகுதியில் சிறு துப்பு கூட கிடைக்காததால் போலீசார் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், குற்றவாளிகளை பிடிக்க சிரமமாக உள்ளதாக போலீசார் கவலையுடன் தெரிவித்தனர். பல வழக்குகளில் குற்றவாளிகள் எளிதாக மாட்டிக் கொள்வார்கள், ஆனால் இந்த வழக்கில் உள்ள குற்றவாளிகள் எங்கு பதுங்கி உள்ளார்கள் என தெரியவில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.