ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டித்தள்ளியதில் 15 பேர் காயம்


ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டித்தள்ளியதில் 15 பேர் காயம்
x
தினத்தந்தி 18 April 2017 4:15 AM IST (Updated: 18 April 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டித்தள்ளியதில் 15 பேர் காயமடைந்தனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே பாளையத்தேரி என்ற நரசிங்கபுரம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் சம்பிரதாயம் நிமித்தமாக கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. தொடர்ந்து, தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 200 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

15 பேர் காயம்

காளைகளை அடக்க 150 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர். ஜல்லிக்கட்டின் போது போட்டி போட்டுக்கொண்டு காளைகளை வீரர்கள் அடக்கினர். இதில் காளைகள் முட்டித்தள்ளியதில் ஏலாக்குறிச்சி கவுதமன்(வயது25), கோவிலூர் சத்தியராஜ்(27), சேங்கராயன் கட்டளை மகேந்திரன்(24), அருங்கால் தினேஷ்(27), ஏலாக்குறிச்சி பார்த்திபன்(27) உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழு வினர் சிகிச்சை அளித்தனர்.

இதில் கவுதமன்,சத்தியராஜ் இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் , பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். 

Next Story