மானிய கடன் வழங்கப்படுகிறது என்ற தகவலால் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது


மானிய கடன் வழங்கப்படுகிறது என்ற தகவலால் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 18 April 2017 4:15 AM IST (Updated: 18 April 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த வட்டியில் மானிய கடன் வழங்கப் படுகிறது என்ற தகவலால் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டம் அலைமோதியது

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழக்கத்தை விட நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மனுக்களை கொடுப்பதில் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆடு, மாடுகள் வாங்க குறைந்தவட்டியில் மானியக்கடன் வழங்கப்படுகிறது என தகவல் பரவியதால் இங்கு திரண்டு வந்ததாக பொது மக்கள் தெரிவித்தனர்.கடன் பெறுவதற்கான திட்டங்கள் குறித்து முறையாக அறிவித்து செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. நேற்று ஏராளமான பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்ததால் குடிநீர் கிடைக்காமல் தவித்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் புற்களுக்கு திறந்து விடப்படும் தண்ணீரை மக்கள் குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். கோடை காலத்தில் கலெக்டர் அலுவலகம் வரும் பொது மக்களின் தாகத்தை தீர்க்க ஆங்காங்கே சிண்டக்ஸ் தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 1,900 மனுக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கூட்டத்தின் போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், துணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) பாலாஜி, துணை கலெக்டர் (நிலம்) சீனிவாசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஹேமலதா, உடையார்பாளையம் கோட்டாட்சியர் டீனாகுமாரி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டிரைவர்-கண்டக்டர்கள் மனு

அரியலூர் போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றும் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜிடம் மனு கொடுத்தனர். அதில், அரியலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக நகருக்குள் பஸ்கள் இயக்க தடைவிதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். தற்போது பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 5-ந் தேதியில் இருந்து பஸ்கள் அனைத்தும் நகருக்குள் இயக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், நகருக்குள் சாலையின் இருபுறமும் அதிகளவு ஆக்கிரமிப்புகள் இருப்பதால் பஸ்கள் இயக்குவதில் சிரமம் மற்றும் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு பஸ்களை நகருக்குள் இயக்க உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார். 

Next Story