ஆலந்தூரில் நள்ளிரவில் பயங்கரம் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
ஆலந்தூரில் நள்ளிரவில் தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆலந்தூர் மார்கோ தெருவில் உள்ள மாநகராட்சி கழிப்பிடத்தின் அருகே சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக பரங்கிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தி.நகர் துணை போலீஸ் கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர்கள் விமலன், மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர்கள் பொற்கோடி, செல்வின்சாந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண்காணிப்பு கேமராஇதையடுத்து சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ஜான்சி வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்று ஷேர் ஆட்டோக்கள் நிற்கும் இடத்தில் நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
பின்னர் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வீடியோ பதிவில் குடிபோதையில் 2 பேர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு ஓடுவதும், பின்னர் அவர்களில் ஒருவர் திரும்பி வரும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. அதனை அடிப்படையாக கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:–
குடிபோதையில் கொலை?கொலை செய்யப்பட்ட நபர் பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த வேலு (வயது 43). அவரது சொந்த ஊர் திருக்கழுக்குன்றம். அவர் ஆலந்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்து உள்ளார்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்தான் திருமணம் நடந்து உள்ளது. மனைவி திருக்கழுக்குன்றத்தில் உள்ளார். வேலு ஒரு வாரத்துக்கு முன்னர்தான் ஆலந்தூர் வந்து உள்ளார்.
சம்பவத்தன்று அவர் ஆலந்தூர் ஆபிரகாம் நகரில் உள்ள ஒருவருடன் மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
கொலையாளி விரைவில் கைதுஆபிரகாம் நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு முதல் தலைமறைவாகி உள்ளார். அவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் இது குடிபோதையில் நடந்த கொலைதானா? அல்லது அவர்களுக்குள் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளி பற்றி தங்களுக்கு துப்பு கிடைத்து இருப்பதாகவும், எனவே விரைவில் அவரை கைது செய்துவிடுவோம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
தினமும் இரவு நேரங்களில் ஆலந்தூர் ரெயில்வே தண்டவாள பகுதியில் அமர்ந்து மர்மநபர்கள் கஞ்சா அடிப்பதாகவும், அப்போது அவர்களுக்குள் தகராறு மற்றும் அடிதடி ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே இரவு நேரங்களில் தண்டவாள பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.