தூத்துக்குடி மாவட்டத்தில் 13 இடங்களில் டாஸ்மாக் கடை முன்பு பா.ஜ.க.வினர் போராட்டம் 238 பேர் கைது


தூத்துக்குடி மாவட்டத்தில் 13 இடங்களில் டாஸ்மாக் கடை முன்பு பா.ஜ.க.வினர் போராட்டம் 238 பேர் கைது
x
தினத்தந்தி 18 April 2017 9:00 PM GMT (Updated: 2017-04-18T18:16:30+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 இடங்களில் டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்திய பா.ஜனதா கட்சியினர் 238 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 இடங்களில் டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்திய பா.ஜனதா கட்சியினர் 238 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்திய பெண் மீது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தாக்குதல் நடத்தினார். இதனை கண்டித்தும், அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பா.ஜனதா கட்சியினர் டாஸ்மாக்கடை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி வட்டக்கோவில் அருகே உள்ள டாஸ்மாக்கடை முன்பு மாவட்ட செயலாளர் சிவராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட தலைவர் தேவகுமார், வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் செல்வன், துணைத்தலைவர் சிவகணேஷ், பொருளாளர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று தூத்துக்குடி பிரையண்ட்நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் பிரபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூட்டாம்புளி

புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில மருத்துவ பிரிவு செயலாளர் டாக்டர் கோசல்ராம், ஒன்றிய தலைவர் பாலகிருஷ்ணன், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் முத்துகுமார், வர்த்தக பிரிவு மாவட்ட துணை தலைவர் முனியசாமி, கருங்குளம் ஒன்றிய பா.ஜனதா கட்சி தலைவர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோ‌ஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்திய 40 பேரை கைது செய்தனர்.

238 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் டாஸ்மாக் கடை முன்பு பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற 37 பெண்கள் உள்பட 238 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு நரிக்குறவர் காலனி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை நேற்று காலையில் பாரதீய ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டனர்.

மாவட்ட செயலாளர் சிவந்தி நாராயணன், நகர தலைவர் வேல்ராஜா, ஒன்றிய தலைவர் ராம்கி, பொதுச் செயலாளர்கள் மாரிமுத்து, குருசாமி, விஜயராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துவேல், முனியசாமி, தொழிலாளர் பிரிவு பாலு, பிரசார அணி லட்சுமணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அனுமதியின்றி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக 6 பெண்கள் உள்பட 32 பேரை நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஏரல்

ஏரல் காந்தி சிலை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை பாரதீய ஜனதா நகர தலைவர் பரமசிவன், மாவட்ட செயலாளர் வீரமணி, செயற்குழு உறுப்பினர் முத்துராஜ், அமைப்புசாரா தொழிலாளர் அணி முத்துமாலை, ஒன்றிய செயலாளர் செந்தில், பொருளாளர் சந்திரசேகர் உள்பட பலர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அனுமதியின்றி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக 17 பேரை ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகிலா மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் சன்னதி நடு தெருவில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பாரதீய ஜனதா கட்சி ஒன்றிய தலைவர் சித்திரைவேல், நகர தலைவர் காசிராமன், மாவட்ட விவசாய அணி செயலாளர் மாரியப்பன் உள்பட 27 பேரை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கயத்தாறு– பன்னீர்குளம் ரோட்டில் புதிதாக தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடையை பாரதீய ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டனர். ஒன்றிய தலைவர் சென்றாயபெருமாள், நகர தலைவர் வக்கீல் நீதி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 2 பெண்கள் உள்பட 10 பேரை கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோன்று கயத்தாறு– கடம்பூர் ரோட்டில் புதிதாக தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, இந்து முன்னணியினர் கயத்தாறு பழைய பஸ் நிறுத்தத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வடக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி, ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட 5 பேரை கயத்தாறு போலீசார் கைது செய்தனர்.


Next Story