ஆரணி அருகே பயிர்கள் கருகியதால் கடன் சுமை; விவசாயி அதிர்ச்சியில் சாவு


ஆரணி அருகே பயிர்கள் கருகியதால் கடன் சுமை; விவசாயி அதிர்ச்சியில் சாவு
x
தினத்தந்தி 19 April 2017 5:00 AM IST (Updated: 18 April 2017 6:30 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே பயிர்கள் கருகியதால் கடன் சுமையால் அதிர்ச்சி அடைந்த விவசாயி மாரடைப்பால் இறந்தார்.

ஆரணி,

ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 54). விவசாயி. இவருடைய மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு சங்கீதா, மஞ்சுளா, தேவி, ரஞ்சினி ஆகிய 4 மகள்கள் உள்ளனர்.

முதல் 2 மகள்களுக்கு கடன் வாங்கி சங்கர் திருமணம் செய்து வைத்தார். அடுத்த 2 மகள்களும் படித்து வருகிறார்கள். சங்கருக்கு அதே பகுதியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் நெல், கத்தரிக்காய் பயிரிட்டிருந்தார்.

இந்த நிலையில் பருவ மழை பொய்த்து, நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் சங்கரின் நிலத்தில் இருந்த பயிர்கள் கருகியது.

மாரடைப்பால் சாவு

பயிர்களை காப்பாற்ற ரூ.1 லட்சம் பணத்தை அதிக வட்டிக்கு வாங்கி, நிலத்தில் ஆழ்துளை கிணறு போட்டார். ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும் ஒரு ஆழ்துளை போட்டார். அதிலும் தண்ணீர் கிடைக்கவில்லை.

இதனால் சங்கர் மனம் உடைந்தார். கடன் வாங்கிய அதிர்ச்சியில் இருந்த அவருக்கு, கடந்த 15–ந் தேதி இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சு வலியால் அவர் துடித்தார். உடனடியாக குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக அக்ராபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இழப்பீடு தொகை

வறட்சியின் பிடியில் சிக்கி உயிரிழந்த விவசாயி சங்கரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். அவரது மகள்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் தாசில்தார் தமிழ்மணியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, அறிக்கையை தாசில்தாரிடம் அளித்தனர்.


Next Story