என்கவுண்ட்டரில் ரவுடி கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு


என்கவுண்ட்டரில் ரவுடி கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 18 April 2017 8:57 PM IST)
t-max-icont-min-icon

என்கவுண்ட்டரில் ரவுடி கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்த உசிலன்கோட்டையை சேர்ந்த பவானி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

கூலித்தொழிலாளியான எனது கணவர் கோவிந்தனை கடந்த 13–ந் தேதி விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். அன்று இரவு 10.30 மணியளவில் செல்போனில் என்னிடம் பேசிய அவர், மறுநாள் தமிழ்புத்தாண்டு கொண்டாட தேவையான பொருட்களை வாங்கி வருவதாக கூறினார். பேசிக்கொண்டு இருந்தபோதே இணைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த நாள் காலையில் எனது கணவர் சுட்டு கொல்லப்பட்டு பிணமாக கிடப்பதாக தகவல் வந்தது.

அதன்பேரில் நானும், எனது 3 மகள்களும் சம்பவ இடத்திற்கு சென்றோம். அதற்குள் அவரது உடலை ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்று, எங்களின் அனுமதி இல்லாமலேயே பிரேத பரிசோதனை செய்து விட்டனர். பின்னர் உடலை பெற்றுக்கொள்ளும்படி எங்களை போலீசார் வலியுறுத்தினார்கள். ஆனால் எனது கணவரின் சாவுக்கான காரணம் தெரியாமல் உடலை பெற்று கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்

என் கணவர் கொல்லப்பட்டது குறித்து தொண்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் மாற்றப்பட்டுள்ளது. எனது கணவரை கொன்றதில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. என் கணவர் மீதான என்கவுண்ட்டர் நடவடிக்கை அரசியல் அமைப்பு சட்டத்துக்கும், மனித உரிமைக்கும் எதிரானது.

எனவே எனது கணவரை சுட்டுக்கொன்ற போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். கணவர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யவும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

உள்நோக்கம்

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரரின் கணவர் தப்பிக்க முயன்றதால் அவரது காலில் சுட்டதாகவும், அதனால் காயம் அடைந்த அவர் இறந்ததாகவும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது மார்பிலும், முகத்திலும் தான் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. காலில் காயம் எதுவும் இல்லை. எனவே இந்த என்கவுண்ட்டரில் உள்நோக்கம் உள்ளது“ என்று வாதாடினார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

மனுதாரரின் கணவர் உடல் பிரேத பரிசோதனையானது மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நடந்துள்ளது. அது வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மறு பிரேத பரிசோதனை தேவையில்லை. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க வேண்டும். மனுதாரருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக உள்துறை செயலாளர், தென் மண்டல ஐ.ஜி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story