சினிமா பட பாணியில் ஓடையை காணவில்லை என தாசில்தாரிடம் புகார் அளித்த விவசாயிகள்


சினிமா பட பாணியில் ஓடையை காணவில்லை என தாசில்தாரிடம் புகார் அளித்த விவசாயிகள்
x
தினத்தந்தி 19 April 2017 4:00 AM IST (Updated: 19 April 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே சினிமா பட பாணியில் ஓடையை காணவில்லை என உத்தமபாளையம் தாசில்தாரிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.

கம்பம்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு வாழை, தென்னை, திராட்சை, நெல் உள்ளிட்டவைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். முல்லைப்பெரியாறு அணை மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். மழைக்காலங்களில் ஏற்படும் நீர்வரத்தால் கண்மாய்கள் நிரம்பும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

மேலும் ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். குறிப்பாக கம்பத்தில் இருந்து ஆங்கூர்பாளையம் செல்லும் சாலையின் அருகே உள்ள ஓடையில் மழைக்காலத்தில் காட்டாற்று வெள்ளம் செல்வதை காண முடியும். இந்த ஓடை மூலம் அப்பகுதியில் உள்ள 10–க்கும் மேற்பட்ட குளங்கள் நீர்வரத்து பெற்று வந்தன.

ஆக்கிரமிப்பு

இந்த நிலையில் அந்த ஓடையை தனியார் சிலர் ஆக்கிரமித்து தென்னந்தோப்புகளாக மாற்றியுள்ளனர். மேலும் ஒரு சில இடங்களில் பயிர் சாகுபடியும் நடக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதி விவசாயிகள் உத்தமபாளையம் தாசில்தார் குமாரிடம் சினிமா பட பாணியில் ஒரு மனு அளித்தனர்.

தமிழ் சினிமா படத்தில் கிணற்றை காணோம்...! கண்டுபிடித்து தாருங்கள்...! என போலீசாரிடம் ஒரு நடிகர் புகார் தெரிவிப்பார். அதே போல் அவர்கள் கொடுத்த மனுவில், கம்பம்–ஆங்கூர்பாளையம் சாலையின் அருகே உள்ள ஓடையை காணவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ஓடையை கண்டுபிடித்து தாருங்கள் என புகார் அளித்தனர். அந்த மனுவை பார்த்து முதலில் தாசில்தார் அதிர்ச்சியடைந்தார். பின்னர் ஆக்கிரமிப்பு காரணமாக ஓடை இருந்த இடம் தெரியாமல் உள்ளது என தெரிவித்ததும் அமைதியானார். அதைத்தொடர்ந்து மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.


Next Story