டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 19 April 2017 12:57 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைமறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தவும் முயன்றனர்.

புதுக்கோட்டை,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கடந்த 1-ந் தேதி முதல் தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3 ஆயிரத்து 400 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 90 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதில் புதுக்கோட்டை நகரில் உள்ள 14 டாஸ்மாக் கடைகளில் 13 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. புதுக்கோட்டையில் இருந்து அரிமளம் செல்லும் சாலையில் உள்ள அன்னசத்திரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை மட்டும் தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று அன்னசத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க. புதுக்கோட்டை நகர சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் லெட்சுமணன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலை மறியல் முயற்சி

இதில் மாவட்ட துணை தலைவர் ஜெகதீசன், செயற்குழு உறுப்பினர் கருப்பையா உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் அன்னசத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அன்னசத்திரம் பகுதியில் இருந்து டாஸ்மாக் கடை உள்ள இடம் வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றதாக பா.ஜ.க.வை சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

நார்த்தாமலை

இதே போல நார்த்தாமலை அருகே உள்ள காவேரிநகர் கடைவீதி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென நேற்று பா.ஜ.க. ஒன்றிய தலைவர் செல்லத்துரை தலைமையில், மாநில செயலாளர் புரட்சிகவிதாசன், மாவட்ட பொது செயலாளர் சிவசாமி மற்றும் அந்த அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு வந்த புதுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 37 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மணமேல்குடி

மணமேல்குடி தண்டலை சாலையில் குடியிருப்பு பகுதி ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை அகற்றப்படாமல் உள்ளது. இந்த கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறி கடந்த சில தினங்களாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மணமேல்குடி ஒன்றிய பா.ஜ.க. சார்பில் அந்த டாஸ்மாக் முன்பு கடையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆலங்குடி

ஆலங்குடி அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆலங்குடி அரசமரம் பஸ்நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த ஆலங்குடி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை கைது செய்தனர்.

கறம்பக்குடி

கறம்பக்குடி ஒன்றிய பா.ஜ.க. சார்பில் ரெகுநாதபுரத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பூட்டு போடும் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கறம்பக்குடி ஒன்றிய பா.ஜ.க. தலைவர் விஜயகுமார் தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக டாஸ்மாக் கடைக்கு சென்று பூட்டுபோட முயன்றனர். உடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்தனர்.கறம்பக்குடி நகர பா.ஜ.க. கட்சி சார்பில் அம்புக்கோவில் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் அஞ்சுவேராஜன் தலைமை தாங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் தமிழரசன், முன்னாள் ஒன்றிய தலைவர் கலியபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story