மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் இதயம் விவசாயிக்கு பொருத்தப்பட்டது


மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் இதயம் விவசாயிக்கு பொருத்தப்பட்டது
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 19 April 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. தானமாக பெறப்பட்ட இதயம் விவசாயிக்கு பொருத்தப்பட்டது.

பெங்களூரு,

பெங்களூரு உத்தரஹள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் ரவி(வயது 26). இவர், கடந்த 16–ந் தேதி மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இதுகுறித்து அறிந்த அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து சோகத்தில் மூழ்கினர். ஆனாலும், இந்த சோகத்திலும் ரவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அதுபற்றி அவர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று அதிகாலையில் அறுவை சிகிச்சை செய்து ரவியின் உடலில் இருந்து கண்கள், இதயம் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

இதயம் பொருத்தப்பட்டது

தானமாக பெறப்பட்ட இதயம் பெங்களூரு பொம்மசந்திரா தொழிற்பேட்டையில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் இதய கோளாறுக்கு சிகிச்சை பெற்று வரும் கொப்பல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயியான நாகராஜ்(40) என்பவருக்கு தேவைப்படுவது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, ரவியின் இதயத்தை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து ஆம்புலன்ஸ் மூலம் உத்தரஹள்ளி மருத்துவமனையில் இருந்து பொம்மசந்திரா தொழிற்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அறுவை சிகிச்சை மூலம் ரவியின் இதயத்தை நாகராஜூவுக்கு டாக்டர்கள் பொருத்தினர்.

முன்னதாக உத்தரஹள்ளியில் இருந்து ஆம்புலன்சில் பொம்மசந்திரா தொழிற்பேட்டைக்கு இதயம் கொண்டு செல்லப்படுவது குறித்து மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், இதயம் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டன. மாநகர போலீசாரின் உதவியால் 38 கிலோ மீட்டர் தொலைவை 26 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story