1,575 கிராமங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் சித்தராமையா பேட்டி
1,575 கிராமங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
முதல்–மந்திரி சித்தராமையா நேற்று வறட்சி நிவாரண பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். அதன் பிறகு சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
கர்நாடகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் நான் கலந்துரையாடினேன். 2016–17–ம் ஆண்டில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மொத்தம் ரூ.843 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 90 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. 1,575 கிராமங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ரூ.10 கோடி நிதி உள்ளதுமாநிலத்தில் எந்த பகுதியிலாவது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ரூ.1.90 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நிதி பற்றாக்குறை இல்லை. ரூ.272 கோடி இருப்பதாக கலெக்டர்கள் என்னிடம் கூறினர். ஒவ்வொரு கலெக்டரின் வங்கி கணக்கிலும் ரூ.10 கோடி நிதி உள்ளது.
விவசாயிகளிடம் இருந்து 607 ஆழ்குழாய் கிணறுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு மாத வாடகையாக தலா ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரம் வரை கொடுக்கிறோம். கால்நடைகளுக்கு வழங்க அடுத்த 20 வாரங்களுக்கு தேவையான தீவனம் இருப்பு உள்ளது. 384 தீவன கிடங்குகளை தொடங்கியுள்ளோம். 84 இடங்களில் கோசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைக்கு வரும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ரூ.5 லட்சம் நிவாரணம்தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் கொடுக்கிறோம். அத்துடன் அவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் குடும்ப ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்குகிறோம். விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையில் இருந்து அவர்களின் கடனுக்கு பிடித்தம் செய்யக்கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.