பெங்களூருவுக்கு வந்த டி.டி.வி.தினகரன் சிறையில் சசிகலாவை சந்திக்காமல் திரும்பி சென்றது ஏன்? பரபரப்பு தகவல்கள்
பெங்களூருவுக்கு வந்த டி.டி.வி.தினகரன் சிறையில் சசிகலாவை சந்திக்காமல் திரும்பி சென்றது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு,
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விதிமுறைகளின்படி நடத்தப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு 2 அணியாக செயல்படுகிறது.
டி.டி.வி.தினகரன் தலைமையில் அ.தி.மு.க.(அம்மா) அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க.(புரட்சித்தலைவி அம்மா) அணியும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ சின்னம் இரட்டை இலை தேர்தல் கமிஷனால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க முயற்சி செய்ததாக டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அமைச்சர்கள் ஆலோசனைஇந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக டி.டி.வி.தினரகன் நேற்று முன்தினம் பெங்களூரு வந்தார். போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வரஇயலாததால் அவர் சசிகலாவை சந்திக்கவில்லை என்று கூறப்பட்டது. இதற்கிடையே டெல்லியில் இருந்து போலீசார் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாக பகுதிக்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால் அவர் சிறைக்கு வராமல் தவிர்த்தார் என்றும் ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் பெங்களூருவில் ஒரு ஓட்டலில் அவர் தங்கினார். மறுநாள் அதாவது நேற்று சசிகலாவை அவர் சந்திப்பார் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முக்கியமான அமைச்சர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். அ.தி.மு.க.வில் தனித்தனியாக செயல்படும் 2 அணிகளும் ஒன்றாக இணைவது குறித்து அவர்கள் விவாதித்தனர். டி.டி.வி.தினகரன் பெங்களூருவில் இருந்தபோது இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. இதனால் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
சென்னை சென்றார்இந்த சூழ்நிலையில் பெங்களூருவில் தங்கியிருந்த டி.டி.வி.தினகரன், சசிகலாவை சந்திக்கும் முடிவை திடீரென ரத்து செய்துவிட்டு நேற்று அதிகாலை 1 மணியளவில் அவர் திடீரென்று சென்னை புறப்பட்டு சென்றார். சசிகலாவை அவர் சந்திக்காமல் திரும்பி சென்றது ஏன்? என்பது குறித்து சரியான காரணம் எதுவும் தெரியவில்லை.
அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைவது குறித்து சென்னையில் அமைச்சர்கள் ஒன்றுகூடி ஆலோசித்த காரணத்தால், இதுபற்றி விவாதிக்க அவர் அவசர அவசரமாக சென்னை புறப்பட்டு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வுகள் எல்லாம் சுமூகமாக முடிந்த பிறகு டி.டி.வி.தினகரன் மீண்டும் பெங்களூரு வந்து சசிகலாவை சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.