மதுக்கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினர் கைது
மதுக்கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினர் 70 பேர் கைது
ஊட்டி,
ஊட்டி அருகே தேனாடுகம்பையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியை சேர்ந்த 20 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் மதுக்கடைகள்சுப்ரீம் கோர்ட்டு மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட்டன. இந்த மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு பதிலாக வேறு இடத்தில் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சாலை மறியல், முற்றுகை போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்இந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், புதிய டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் பா.ஜனதா கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பின் படி ஊட்டி அருகே உள்ள தேனாடு கம்பையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி நேற்று நீலகிரி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
70 பேர் கைதுஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் பாபு தலைமை தாங்கினார். மண்டல பொதுச்செயலாளர் லோகநாதன், பரமேஸ்வரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக்கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரிகோத்தகிரி கடைவீதியில் கோவில்களுக்கு அருகே திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரியும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் மாநில அரசை வலியுறுத்தி கோத்தகிரி ஜீப் திடலில் பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் நஞ்சுண்ட போஜன் தலைமை தாங்கினார். இளைஞரணி மாவட்ட செயலாளர் உதயகுமார், நகர செயலாளர் பாலாஜி, மாவட்ட செயலாளர் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் அன்பரசன், மாவட்ட துணை தலைவர் ராமசந்திர ரெட்டி, அமைப்பு செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோத்தகிரி சுற்றுவட்டார முக்கிய பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா மற்றும் அந்த கட்சியின் இளைஞரணியை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.