வரதட்சணை கொடுமையால் பரிதாபம் பெண் தீக்குளித்து தற்கொலை கணவர் உள்பட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
வரதட்சணை கொடுமையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உப்பள்ளி,
தார்வார் தாலுகா பேகூர் பகுதியை சேர்ந்தவர் மலாவடா (வயது 25). விவசாயி. இவருக்கும் சலகிகொப்பா பகுதியை சேர்ந்த பீமவா (21) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பீமவாவின் பெற்றோர் நகை, பணம் என மலாவடாவுக்கு வரதட்சணை கொடுத்துள்ளனர். ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே மலாவாடாவும், அவருடைய பெற்றோரும் கூடுதல் வரதட்சணை கேட்டு பீமவாவை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
இதனால் பீமவா மனமுடைந்து காணப்பட்டார். இதுபற்றி பீமவா, தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் மனமுடைந்த பீமவாவின் பெற்றோர், பணம் தயார் செய்வதாக அவரிடம் ஆறுதல் கூறினர்.
தற்கொலைஆனாலும், கணவர், மாமியார் மற்றும் மாமனாரின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் மேலும் மனமுடைந்த பீமவா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த மலாவாடா மற்றும் அவருடைய பெற்றோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கரக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், பீமவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி அறிந்ததும் பீமவாவின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பீமவாவின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
3 பேருக்கு வலைவீச்சுஇதுகுறித்து பீமவாவின் பெற்றோர், கரக போலீசில் புகார் கொடுத்தனர். அதில், எனது மகளை அவருடைய கணவரும், மாமனார், மாமியார் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் தான் மனமுடைந்து எனது மகள் தற்கொலை செய்துகொண்டார். எனது மகளை தற்கொலைக்கு தூண்டிய கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதுகுறித்து கரக போலீசார் வழக்குப்பதிவு செய்து பீமவாவின் கணவர், மாமியார், மாமனார் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.