60 சதவீத நிதி வழங்கியும் ஆயுஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசுகள் ஆர்வம் காட்டுவது இல்லை


60 சதவீத நிதி வழங்கியும் ஆயுஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசுகள் ஆர்வம் காட்டுவது இல்லை
x
தினத்தந்தி 19 April 2017 5:15 AM IST (Updated: 19 April 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

60 சதவீதம் நிதி வழங்கியும் ஆயுஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசுகள் ஆர்வம் காட்டுவது இல்லை என்று மத்திய மந்திரி ஸ்ரீபட்யசோநாயக் கூறினார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பா.ஜனதா கட்சி ஊழியர்கள் கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்திய பாரம்பரிய மருத்துவ (ஆயுஸ்) துறை மந்திரி ஸ்ரீபட்யசோநாயக் நேற்று பொள்ளாச்சி வந்தார். அவர் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை கட்டிடத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சாலை, மின்சார வசதி

பிரதமர் நரேந்திரமோடி அனைத்து மத்திய மந்திரிகளும், சில மாவட்டங்களுக்கு சென்று மக்கள் குறை கேட்டு அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி நான் தற்போது கோவை மாவட்டம் வந்துள்ளேன். நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு 3 ஆண்டு ஆட்சியில் ஏழை – நடுத்தர மக்கள் பயன் அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டு ஆகியும் இன்னும் முழுமையாக தீர்க்க முடியாத சில பிரச்சி னைகள் உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சாலை, மின்சாரம் வசதி இல்லாமல் 80 ஆயிரம் கிராமங்கள் இருந்தன. தற்போது 12 ஆயிரம் கிராமங்களுக்கு சாலை, மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

ஜந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கணக்குகளில் பொதுமக்கள் ரூ.64 ஆயிரம் கோடி செலுத்தி உள்ளனர். மேலும் அரசின் மானியம், நலத்திட்ட உதவிகள் யாருடைய இடையூறும் இன்றி நேரடியாக மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. இளைஞர்கள் தொழில் தொடங்க மத்திய அரசு பல கோடி ரூபாய் கடன் வழங்கி வருகிறது.

ஆயுஸ் மருத்துவமனை

அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையிலும், ராணுவத்தை பலப்படுத்தும் வகையிலும் ரூ.2.74 லட்சம் கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே துறையை மேம்படுத்த ரூ.1.86 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு ஆயுஸ் மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான 60 சதவீதம் நிதியை மத்திய அரசு வழங்கும். 40 சதவீதம் மாநில அரசின் பங்கு ஆகும். ஆனால் ஆயுஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசுகள் ஆர்வம் காட்டுவதில்லை.

எய்ம்ஸ் மருத்துவமனை போல் பல்வேறு ஆராய்ச்சி வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தண்ணீர் பிரச்சினை உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜி.எஸ்.டி. வரி

20 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாத ஜி.எஸ்.டி. வரி சட்டத்தை மத்திய பா.ஜனதா அரசு நிறைவேற்றி உள்ளது. மத்திய அரசு லஞ்சம், ஊழக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் தமிழகத்திலும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் வீடுகளில் வருமான வரித் துறையினர் நடத்தும் சோதனைக்கும், பா.ஜனதாவிற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. தமிழகத்தின் மீது எங்களுக்கு எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் போராட்டம்

இதையடுத்து, டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தும் தொடர் போராட்டம் குறித்து மத்திய மந்திரியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது மத்திய மந்திரி ஸ்ரீபட்யசோநாயக், டெல்லியில் எங்கு போராட்டம் நடக்கிறது என்று கேட்டார். பின்னர் அவர் அருகில் இருந்த பா.ஜனதா நிர்வாகிகளிடம் பேசி விட்டு, தேங்காய்க்கு கட்டுபடியான நல்ல விலை கிடைக்க பாமாயில் இறக்குமதிக்கு வரி கூடுதலாக விதிக்கவும், டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து டெல்லி சென்ற பிறகு சம்பந்தப்பட்ட துறை மந்திரிகளை சந்திப்பேன் என்றார்.

அப்போது, பா.ஜனதா மாநில செயலாளர் நந்தகுமார், கோட்ட பொறுப்பாளர் செல்வகுமார், மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், பொதுச் செயலாளர் ரகுநாதன், மாவட்ட செயலாளர் பாலு, மாநில செயற்குழு உறுப்பினர் பாபா ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story