தாராபுரம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
தாராபுரம் அருகே கொளத்துப்பாளையத்தில் குடிநீர் கேட்டு அந்த பகுதி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம்
தாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு அமராவதி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால், இந்த திட்டத்தில் குடிநீர் வினியோகம் நடைபெறுவதில்லை. அமராவதி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீரானது அமராவதி ஆற்றில் தாராபுரம் வரை மட்டுமே வந்து சேர்ந்தது. இதனால் தாராபுரத்தை அடுத்துள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சி, காங்கேயம் தாலுகா, வெள்ளகோவில் தாலுகா, மூலனூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணமுடியவில்லை. கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
காலிக்குடங்களுடன் சாலைமறியல்இந்த நிலையில் கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் குடிநீர் வினியோகம் நடைபெறாததை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த பெண்கள், நேற்று தாராபுரம்–கரூர் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து கொளத்துப்பாளையத்தை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:–
பேரூராட்சியில் 7–வது மற்றும் 8–வது வார்டிற்கு உள்பட்ட விநாயகர் கோவில் வீதி, செல்லியம்மன் கோவில் வீதி, பள்ளிவாசல் வீதி, ராஜவீதி ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு அமராவதி குடிநீர் திட்டம் மற்றும் காவிரி குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
நிலத்தடி நீர்மட்டம்வறட்சியின் காரணமாக இந்த 2 திட்டங்களிலிருந்தும் குடிநீர் வழங்கப்படுவதில்லை. கடந்த 2 மாதமாக குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் அவதிப்படுகிறார்கள். பேரூராட்சி நிர்வாகத்தின் மூலமாக 2 வார்டிலும் 4 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதால். 3 ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு விட்டது.
மீதமுள்ள ஒரு ஆழ்குழாய் கிணற்றில் ஓரளவு தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரைத்தான் 2 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறோம். ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இதை வைத்து என்ன செய்ய முடியும்? பேரூராட்சி நிர்வாகம் 10 நாட்களுக்கு ஒரு முறை லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்கிறது. அதுவும் போதுமான அளவு கிடைப்பதில்லை.
போக்குவரத்து பாதிப்புஎனவே இந்த பகுதியில் கூடுதலாக 2 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்துத்தரவேண்டும். 2 நாட்களுக்கு ஒரு முறை லாரி மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என்று கேட்டு சாலை மறியல் போராட்டத்தை நடத்தினோம் என்று கூறினார்கள். சாலை மறியல் போராட்டத்தால் தாராபுரம்– கரூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்தை நடத்தினார்கள். அப்போது கூடுதலாக ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.