பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்; 229 பேர் கைது


பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்; 229 பேர் கைது
x
தினத்தந்தி 19 April 2017 5:00 AM IST (Updated: 19 April 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 229 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு,

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோபி வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த கோபி நகர பா.ஜ.க. தலைவர் தினேஷ்குமார் தலைமையில், மாவட்ட முன்னாள் தலைவர் வெங்கடேஷ்வரன் முன்னிலையில் கட்சியினர் 15 பேர் வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி 15 பேரையும் கைது செய்தனர். அப்போது அவர்கள் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

கோபி அருகே உள்ள அரசூர் டாஸ்மாக் கடை முன்பு சத்தியமங்கலம் ஒன்றிய பா.ஜ.க. பொறுப்பாளர் செல்வராஜ் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெருந்துறை

பெருந்துறையை அடுத்த துடுப்பதி பஸ் நிறுத்தம் அருகே பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இமயம் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், பெருந்துறை ஒன்றிய தலைவர் பி.என்.ஆறுமுகம், வர்த்தகர் அணி தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று டாஸ்மாக் கடை முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 6 பெண்கள் உள்பட 21 பேரை கைது செய்தனர்.

காஞ்சிக்கோவில் நால்ரோடு சந்திப்பில் பா.ஜனதா மாநில விவசாய அணி செயலாளர் சித்ரா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிக்கோவில் மாநில விவசாய அணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டு கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

அந்தியூர்–சத்தியமங்கலம்

அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் டாஸ்மாக் கடை முன்பு அந்தியூர் நகர தலைவர் சரவணன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க.வை சேர்ந்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட பொருளாளர் அஜித்குமார் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாவட்ட செயலாளர் கோகிலா, துணைத்தலைவர்கள் நல்லசாமி, சீனிவாசன், நகர தலைவர் சக்திவேல், செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியினர் பலர் கலந்துகொண்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி அருகே உள்ள பூந்துறை சேமூர் பஸ் நிறுத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மொடக்குறிச்சி ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் செல்வக்குமார், செயலாளர்கள் சண்முகம், துளசிமணி, மண்டல தலைவர் ஆறுமுகம், செய்தி தொடர்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வை சேர்ந்த 26 பேர் அங்கிருந்து புறப்பட்டு அருகில் இருந்த டாஸ்மாக் கடைக்கு ஊர்வலமாக சென்றனர். உடனே அவர்கள் 26 பேரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தாளவாடியில் ராமபுரம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் தாளவாடி ஒன்றிய செயலாளர் நஞ்சப்பன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முத்துராமன் முன்னிலை வகித்தார். உடனே அங்கிருந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 13 பேரை கைது செய்தனர்.

நம்பியூரில் நகர தலைவர் கந்தசாமி தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். புஞ்சைபுளியம்பட்டியில் சுல்தான் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் கட்சியின் மண்டல தலைவர் மோகன்குமார் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

229 பேர் கைது

அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு கட்சியின் மாநில செயலாளர் செந்தில் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் மகாலிங்கம், பொதுச்செயலாளர் எஸ்.பி.முருகேசன் உள்பட 42 பேர் கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 42 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பவானி அருகே உள்ள மயிலம்பாடி டாஸ்மாக் கடை முன்பு பவானி நகர தலைவர் கண்ணன் தலைமையில், மாவட்ட தலைவர் சித்திவிநாயகம் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்த 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 229 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலை 5 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story