‘‘கல்வி மட்டுமே திருட்டு போகாத ஒரே செல்வம்’’ போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் ஆர்.சிவக்குமார் பேச்சு
‘தினத்தந்தி’–குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்கள் நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி: ‘‘கல்வி மட்டுமே திருட்டு போகாத ஒரே செல்வம்’’ போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் ஆர்.சிவக்குமார் பேச்சு
ஈரோடு,
‘‘கல்வி மட்டுமே திருட்டு போகாத ஒரே செல்வம்’’ என்று ஈரோட்டில் தினத்தந்தி– குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய ‘வெற்றி நிச்சயம்’ வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் ஆர்.சிவக்குமார் கூறினார்.
‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சிதமிழில் ‘நம்பர் ஒன்’ நாளிதழான ‘தினத்தந்தி’ நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 16–வது ஆண்டாக ‘வெற்றி நிச்சயம்’ என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 முடித்த மாணவ–மாணவிகள் தங்கள் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான சிறந்த, தகுதியான படிப்பை தேர்ந்து எடுக்கும் வகையிலும், மாணவ–மாணவிகளின் வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் வகையிலும் கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கும் இந்த நிகழ்ச்சி ஈரோடு மல்லிகை அரங்கில் நேற்று நடந்தது.
‘வெற்றி நிச்சயம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாணவ–மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். அதிகாலையில் இருந்தே உற்சாகமாக வந்த மாணவ–மாணவிகள் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். அவர்களுக்கு தினத்தந்தி வெற்றி நிச்சயம் புத்தகம், எழுத்து உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
போலீஸ் சூப்பிரண்டுநிகழ்ச்சி தொடக்க விழாவுக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் ஆர்.சிவக்குமார் தலைமை தாங்கினார். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.கே.நடேசன் முன்னிலை வகித்தார்.
விழாவில் கல்விப்பணியில் ‘தினத்தந்தி’ என்ற தலைப்பில் சென்னை ‘தினத்தந்தி’ தலைமை பொது மேலாளர் (புரமோசன்ஸ்) ர.தனஞ்செயன் பேசினார்.
நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் ஆர்.சிவக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
எளிமையான மொழிநான் ராசிபுரம் அருகே வடுகம் என்ற ஒரு சிறு கிராமத்தில் பிறந்தவன். எனது கிராமத்துக்கு வந்த முதல் பத்திரிகை ‘தினத்தந்தி’. இன்றும் வந்து கொண்டிருக்கும் பத்திரிகையும் அதுதான். ‘தினத்தந்தி’யை பொறுத்தவரை கடினமான சொற்களை விடுத்து, எளிமையான மொழியில் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்து விடும். அதிக தமிழ் வார்த்தைகளை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்த பங்கு ‘தினத்தந்தி’க்கு உண்டு. ‘தினத்தந்தி’யில் வரும் செய்திகள் சுவராசியமாகவும், வாசிப்பவர்களுக்கு உற்சாகத்தை தருவதாகவும் இருக்கும்.
கடந்த 30 ஆண்டுகளாக நான் ‘தினத்தந்தி’யில் வந்த ஏராளமான சிறந்த விஷயங்களை சேகரித்து வைத்து இருக்கிறேன். அதில் முக்கியமானதாக நான் குரூப்–1 தேர்வில் வெற்றி பெற்ற தேர்வு முடிவுகள் வெளி வந்த பக்கமும் ஒன்று.
அச்சம்இன்றைய காலக்கட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களிடம் வெற்றிச்செய்திகளை கேட்டால் ஒரு வித அச்சம் வந்து விடுகிறது. அதாவது எஸ்.எஸ்.எல்.சி. அல்லது பிளஸ்–2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ–மாணவிகளிடம் உங்கள் வெற்றி குறித்து கூறுங்கள் என்று கேட்டால், நாங்கள் 18 மணி நேரம் படித்தோம். படிப்பை தவிர வேறு எதுவும் இல்லை என்றெல்லாம் கூறும்போதுதான் அந்த அச்சம் தோன்றுகிறது. ஏன்? வெறும் படிப்பு படிப்பு என்று மட்டும் இருப்பவர்கள்தான் வெற்றி பெற முடியுமா?
நான் 10–ம் வகுப்பில் 400 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றேன். பிளஸ்–2 வில் 900 மதிப்பெண்கள் பெற்றேன். எனக்கு எம்.பி.பி.எஸ். படித்து டாக்டர் ஆக வேண்டும் என்பது கனவு. ஆனால் எனக்கு எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைக்கவில்லை.
ஏமாற்றம்இந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 40 நாட்கள் நான் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அனைவரிடமும் டாக்டருக்கு படிக்க போகிறேன் என்று கூறிவிட்டு இப்போது இல்லை என்று எப்படி கூறுவது என்ற தயக்கம் எனக்கு இருந்தது. அப்போதுதான் எனது தந்தை என்னிடம் கால்நடை மருத்துவருக்கு படித்தாலும் பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போடலாம் என்று கூறினார். அதைக்கேட்டபிறகுதான் சற்று இயல்புநிலைக்கு திரும்பினேன்.
உலகத்தில் பலரும் டாக்டர், என்ஜினீயர் ஆகிய படிப்புகள்தான் உயர்ந்தவை என்று நினைக்கிறார்கள். தற்போதைய நிலையில் படிக்கும் 3 சதவீதத்தினர் மட்டுமே டாக்டர் அல்லது என்ஜினீயரிங் துறையை தேர்ந்து எடுக்கிறார்கள். 97 சதவீதத்தினர் வேறு துறைகளைத்தான் தேர்வு செய்கிறார்கள். டாக்டர், என்ஜினீயர் என்றால் அந்த துறை பணியோடு நின்று விடும். ஆனால் கலை அறிவியல் துறையை தேர்ந்து எடுப்பவர்கள் ஆட்சியாளர்களாக, இன்னும் பல துறைகளில் சாதிக்கலாம்.
மாற்றுத்திட்டம்எனவே எந்த விஷயத்திலும் ஒரே பார்வையில் இருக்கக்கூடாது. மாற்று திட்டம் ஒன்றையும் வைத்திருக்க வேண்டும். டாக்டர் ஆக வேண்டும் என்று கனவு காண்பது தவறு இல்லை. ஆனால் அது கிடைக்காதபோது அதற்கான இன்னொரு மாற்றினை தேர்வு செய்து வெற்றி பெற தயாராக இருக்க வேண்டும்.
வெற்றி நிச்சயம் என்ற இந்த நிகழ்ச்சியின் பெயரைப்பார்த்தால் நம்பிக்கை தோன்றுகிறது. வெற்றி கிடைக்க வழி என்றும், வழி என்ன என்றும் இல்லாமல், ‘தினத்தந்தி’யின் சிறப்பு தன்மையுடன் வெற்றி நிச்சயம் என்று சுவராசியமாக தலைப்பிட்டு உள்ளனர். இதுவே உங்களுக்கு வெற்றியைத்தரும்.
சாதிக்க வேண்டும்பொதுவாகவே காலையில் ‘தினத்தந்தி’ படிப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். மங்கலகரமான செய்தி தலைப்புகளை பார்க்கும்போது மனம் மகிழும். காவல்துறை செய்திகளை தரும்போது கூட நேர்மறையாக, யாருடைய மனதையும் புண்படுத்தாமல் வெளியிடுவது ‘தினத்தந்தி’யின் சிறப்பு.
மாணவ–மாணவிகள் இந்த நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொண்டால் உங்கள் வாழ்விலும் சாதிக்க முடியும். இந்த நேரத்தில் கவிஞர் வாலி எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. ‘‘ஊக்குவிப்பவர் ஊக்குவித்தால், ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்...’’ என்பதாகும்.
எனவே மாணவ–மாணவிகளாகிய நீங்கள் தேக்கு விற்க, ஊக்குவிக்கும் இந்த ஊக்குவிப்பை சரியாக பயன்படுத்தி சாதிக்க வேண்டும்.
சுமைகள்20–ம் நூற்றாண்டில் தவிர்க்க முடியாத சக்தியாக காந்தி இருந்தார். அதுபோல் 21–ம் நூற்றாண்டில் தவிர்க்க முடியாதவராக இருந்தவர் டாக்டர் அப்துல்கலாம். நம் கண்முன்னால் வாழ்ந்து மறைந்த அவர் ராமேசுவரம் பேய்க்கரும்பு பகுதியில் பிறந்தார். பேப்பர் போடும் பையனாக வேலை செய்தார். கல்லூரி படிப்பில் சேர்ந்தபோது விடுதியில் சைவ உணவுக்கு மாதம் ரூ.100, அசைவ உணவுக்கு மாதம் ரூ.150 பணம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் பெற்றோரை சிரமப்படுத்தக்கூடாது என்று சைவ உணவை தேர்ந்து எடுத்தார். அவர் இந்தியாவின் ஜனாதிபதியானார். பாரத ரத்னாவாக திகழ்கிறார். விண்ணிலும் சாதனை செய்தார். மண்ணிலும் சாதனை செய்தார். அவரது வாழ்வு உண்மையானது. எளிமையானது. திறந்த புத்தகம். எதற்காக இதை சொல்கிறேன் என்றால் நமது சொகுசு வாழ்வுக்காக பெற்றோரிடம் மாணவ–மாணவிகள் சுமைகளை திணிக்கக்கூடாது.
திருட்டு போகாத செல்வம்ஈரோட்டின் மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கும் எஸ்.கே.எம். அதிகம் படிக்கவில்லை என்றாலும் இன்று அவரது நிறுவனத்தில் 50–க்கும் மேற்பட்ட கால்நடை டாக்டர்களுக்கு வேலை கொடுத்து இருக்கிறார் என்றால், உழைப்புதான் காரணம்.
இங்கே இருக்கும் மாணவ–மாணவிகள் யாரோ ஒருவர்தான் நாளை ஈரோடு கலெக்டர், ஈரோடு போலீஸ் சூப்பிரண்டாக வருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையுடன் நீங்கள் படிக்க வேண்டும். கல்வி என்றும் அழிவு இல்லாதது. எனது காவல்துறை அனுபவத்தில் இதுவரை எத்தனையோ புகார்கள் வந்து உள்ளன. மோட்டார் சைக்கிளை காணவில்லை. நகைகளை காணவில்லை. கணவரை காணவில்லை. மனைவியை காணவில்லை என்றெல்லாம் புகார்கள் வந்து உள்ளன. ஆனால் எனது கல்வியை காணவில்லை. எனது அறிவை காணவில்லை என்று யாரும் புகார் கொடுத்ததில்லை. ஏன் என்றால் கல்வி மட்டுமே திருட்டு போகாத ஒரே செல்வம். அந்த கல்வி செல்வத்தை பெற்றால் வெற்றி நிச்சயம் என்று கூறி வாழ்த்துகிறேன்.
இவ்வாறு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் ஆர்.சிவக்குமார் கூறினார்.
கோட்டாட்சியர்விழாவில் ஈரோடு ஆர்.டி.ஓ. ஆர்.நர்மதாதேவி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து மாணவ–மாணவிகளை வாழ்த்தி பேசினார்.
தொடர்ந்து கல்வியாளர்கள், துறை வல்லுனர்கள் பேசினார்கள்.
மருத்துவத்துறை குறித்து சென்னை ஆவடி செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழக மேலாண்மைத்துறை பேராசிரியை ஆர்.காயத்திரி பேசினார். பொறியியல் துறை குறித்து குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரி முதல்வர் வி.கே.சண்முகநாதன் பேசினார். சிவில் சர்வீசஸ் குறித்து திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிக நிர்வாக இயல் துறை தலைவர் எஸ்.நாராயணராஜன் என்கிற நெல்லை கவிநேசன் பேசினார்.
கல்விப்பணிகல்விப்பணியில் எக்ஸல் பொறியியல் கல்லூரி என்ற தலைப்பில் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் டாக்டர் என்.மதன்கார்த்திக் பேசினார்.
பட்டய கணக்கியல் துறை குறித்து மதுரை சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் டி.தவமணியும், முப்படைகளில் வேலை வாய்ப்பு என்ற தலைப்பில் முன்னாள் படைவீரர்கள் நல இயக்கக உதவி இயக்குனர் (நிதி) லெப்டினன்ட் கமாண்டர் எஸ்.சங்கீதாவும் பேசினார்கள்.
பாலிடெக்னிக் கல்லூரிகளும், கல்வி வாய்ப்புகளும் என்ற தலைப்பில் எக்ஸல் தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் இ.பழனிச்சாமி பேசினார். சட்டத்துறை குறித்து சேலம் வக்கீல் மற்றும் சட்டக்கல்வியாளர் பி.ஆர்.ஜெயராஜன், கலை மற்றும் அறிவியல் துறை குறித்து கோவை பாரதியார் பல்கலைக்கழக மேலாண்மையியல் கல்லூரி இணை பேராசிரியர் எஸ்.கிருஷ்ணராஜ் ஆகியோர் பேசினார்கள்.
பரிசுஉணவு இடைவேளையின்போது நன்னிலம் ஜி.கேசவனின் பலகுரல் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. அவருடன் நெல்லை ராஜ்குமார் இசைக்கருவி வாசித்தார். முடிவில் ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ–மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கருத்து தெரிவித்து பேசினார்கள். நிகழ்ச்சிக்கு அதிகாலையில் முதன் முதலில் வந்த மாணவ–மாணவிகள் மற்றும் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி ராம்குமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 1,500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் டி.தேவகுமார் வரவேற்றார். முடிவில் ஈரோடு தினத்தந்தி மேலாளர் ஆர்.சுந்தர் நன்றி கூறினார்.