கும்பகோணம் பகுதியில் மதுக்கடையை மூடக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்


கும்பகோணம் பகுதியில் மதுக்கடையை மூடக்கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 19 April 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் பகுதியில் மதுக்கடையை மூடக்கோரி பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கபிஸ்தலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமியின் உருவபொம்மை எரிக்கப் பட்டது.

அய்யம்பேட்டை,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கும்பகோணம் நகரத்தில் இருந்த 23 மதுக்கடைகள் மூடப்பட்டன. கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள மதுக்கடையை மூடவில்லை. இந்த நிலையில் பட்டீஸ்வரத்தில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி அங்கு, பா.ஜனதா கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா ஒன்றிய தலைவா் சிவக்குமாா் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளா் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளா் சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினா் உமாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில், பட்டித்தோப்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்திரபோஸ், நெசவாளர் பிரிவு நிர்வாகிகள் இளங்கோவன், தேசிகன், அய்யம்பேட்டை நகர தலைவர் ஹரிராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு மதுக்கடையை மூட வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

உருவ பொம்மை எரிப்பு

கபிஸ்தலத்தில் காவிரி ஆற்றங்கரையில் இயங்கி வரும் மதுக்கடையை மூடக்கோரி பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா ஒன்றிய தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் சதன்குமார், பாபநாசம் ஒன்றிய விவசாய அணி தலைவர் கனகராஜ், இளைஞர் அணி நிர்வாகி ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story