பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 4:15 AM IST (Updated: 19 April 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தில் செட்டிக்குளம் ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, அங்கு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவுப்படி பெரம்பலூர் டவுன் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட ஒரு டாஸ்மாக் கடை அந்த பகுதிக்கு மாற்றப்பட்டு திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையறிந்த செஞ்சேரி கிராம மக்கள், செட்டிக்குளம் ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அந்த டாஸ்மாக் கடையை சுற்றிலும் தனியார் ஆஸ்பத்திரி, மாணவர்கள் விடுதி, ஆதரவற்றோர் இல்லம் உள்ளிட்டவை இருக்கின்றன. மேலும் இங்கு ஆரம்பிக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வரும் சிலர், அவ்வழியாக செல்லும் பெண்கள், மாணவிகளை கேலி செய்கின்றனர். எனவே புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் செஞ்சேரி ரோட்டில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த பெரம்பலூர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

முற்றுகையிட்டனர்

இதற்கிடையே செஞ்சேரி கிராம பெண்கள் மற்றும் பொதுமக்கள் மாற்றுப் பாதையில் சென்று செட்டிக்குளம் ரோட்டிற்கு வந்து புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். அப்போது டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. செஞ்சேரி கிராமத்திலுள்ள தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் முன்வரவில்லை. மாறாக டாஸ்மாக் தண்ணீரை (சரக்கு) விற்பனை செய்ய புதிய கடை திறந்திருப்பது கண்டனத்துக்குரியது என குற்றம் சாட்டினர். நேரம் செல்ல செல்ல செஞ்சேரி கிராம மக்கள் திரளானோர் அந்த டாஸ்மாக் கடையின் முன்பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையில் அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திக், இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், சிவகுமார் உள்பட போலீசார் மற்றும் தாசில்தார் பால கிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை செட்டிக்குளம் ரோட்டிலிருந்து அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும் இது குறித்து டாஸ்மாக் மண்டல மேலாளரிடம் மனு கொடுங்கள் எனவும் போலீசார் அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்தவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். 

Next Story