‘பேஸ்புக்’கில் பழகி மும்பையை சேர்ந்தவரிடம் ரூ.12½ லட்சம் மோசடி நைஜீரிய தம்பதி டெல்லியில் கைது
‘பேஸ்புக்’கில் பழகி மும்பையை சேர்ந்தவரிடம் ரூ.12½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய தம்பதியை போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை பாண்டுப் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மெர்சி என்ற பெயரில் ‘பேஸ்புக்’கில் பெண் ஒருவர் அறிமுகம் ஆனார். அவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என கூறினார். சந்தீப் அந்த பெண்ணிடம் நட்பாக பழகி வந்தார். இந்தநிலையில் ஒரு நாள் அந்த பெண் இந்தியாவில் கிடைக்கும் ஒரு சில விதைகளை வாங்கி அனுப்பினால் கோடி கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். மேலும் டெல்லியில் அந்த விதைகள் கிடைப்பதாக கூறி அதை விற்பனை செய்பவரின் இ–மெயில் முகவரி, செல்போன் எண்ணையும் கொடுத்தார்.
ரூ.12½ லட்சம் மோசடிஇதையடுத்து சந்தீப் சிங் விதை விற்பவர் என பெண் கூறிய எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். அவர் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தால் விதைகளை பார்சலில் அனுப்புவதாக கூறினார். இதை நம்பிய சந்தீப் சிங் அந்த நபரின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்தார். ஆனால் அவருக்கு விதை ஏதும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் சந்தீப் அந்த நபரை மீண்டும் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் மேலும் ஒரு லட்சம் அனுப்பினால் விதையை அனுப்புவதாக கூறினார். அப்பேது சந்தீப் பேசுபவரின் முகவரியை கேட்டார். ஆனால் அந்த நபர் முகவரியை சொல்லாமல் இணைப்பை துண்டித்துவிட்டார்.
நைஜீரிய தம்பதி கைதுஇதன்மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துகொண்ட சந்தீப் இதுகுறித்து பாண்டுப் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நைஜீரியாவை சேர்ந்த பென்சன் (39) அவரது மனைவி நெகரிகா (37) சந்தீப்பிடம் ‘பேஸ்புக்’கில் மெர்சி என்ற பெயரில் பழகி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டெல்லியில் பதுங்கி இருந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலீசார் 14 செல்போன்கள், வெளிநாட்டு சிம் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த தம்பதி 50–க்கும் மேற்பட்டவர்களிடம் கோடி கணக்கில் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.