திருவள்ளூரில், ஆக்கிரப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டு தரக்கோரி மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை


திருவள்ளூரில், ஆக்கிரப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டு தரக்கோரி மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை
x
தினத்தந்தி 19 April 2017 4:45 AM IST (Updated: 19 April 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டு தரக்கோரி திருவொற்றியூரை சேர்ந்த மீனவர்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று சென்னை திருவொற்றியூர் குப்பத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி மீனவர்கள் கூறியதாவது:–

திருவொற்றியூர் குப்பம் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகிறோம். கடந்த 1991–ம் ஆண்டு கடல் அரிப்பால் எங்கள் வீடுகள் பாதிக்கப்பட்டதால் திருவொற்றியூர் தியாகராஜர் வடிவுடையம்மன் கோவில் அருகே வசிக்க எங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. நாங்கள் அந்த இடத்தை பயன்படுத்தி வந்தோம்.

மீட்டுத்தர வேண்டும்

இந்தநிலையில் எண்ணூர் விரைவு சாலைப்பணித்திட்டம் தொடங்கப்பட்டபோது அங்குள்ள திருவொற்றியூர் நல்லதண்ணீர் ஓடைக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கும் வடிவுடையம்மன் கோவில் அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து உள்ளனர்.

மேலும், அதிகாரிகள் அந்த இடத்தை நல்லதண்ணீர் ஓடைக்குப்பத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டா உரிமை கொடுத்துள்ளனர்.

இதனால் காலம் காலமாக அந்த இடத்தை பயன்படுத்தி வந்த நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம். அந்த இடத்தை மீட்டுத்தர வேண்டும். இதுதொடர்பாக கடந்த 20 நாட்களாக போராடியும் எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை.

கலெக்டரிடம் மனு

இனியும் இதுபற்றி நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் எங்களது ரே‌ஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து விட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பின்னர் மீனவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் அளித்தனர். அதைப்பெற்று கொண்ட கலெக்டர் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். பின்னர் மீனவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story