மாற்று இடத்தில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி முக்காணியில் பொதுமக்கள் சாலைமறியல்
மாற்று இடத்தில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி, முக்காணியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 3¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆறுமுகநேரி,
மாற்று இடத்தில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி, முக்காணியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 3¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாற்று இடத்தில் தடுப்பணை கட்ட...பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி ஆறு, புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது. மழைக்காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை சேமிக்கும் வகையில், ஆத்தூரை அடுத்த முக்காணியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ரூ.25¾ கோடி செலவில் தடுப்பணை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த தடுப்பணையை முக்காணியில் கட்டுவதற்கு பதிலாக, சேர்ந்தபூமங்கலம்– புன்னக்காயல் இடையில் கட்ட வேண்டும். இல்லையெனில் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர்மட்டம் உப்பாக மாறி விடும். சேர்ந்தபூமங்கலத்தில் ஏராளமான விவசாயிகள் நெல், வாழை பயிரிட்டு உள்ளனர்.
அங்கு கடல் நீர் உட்புகுந்தால் விவசாயம் அழிந்து விடும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறி, சேர்ந்தபூமங்கலம், புன்னக்காயல், கைலாசபுரம் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
சாலைமறியல்இந்த நிலையில் முக்காணியில் தடுப்பணை கட்டும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேர்ந்தபூமங்கலம், புன்னக்காயல், கைலாசபுரம் பகுதி மக்கள் நேற்று காலை 9.30 மணி அளவில் முக்காணி ரவுண்டானாவில் கொளுத்தும் வெயிலில் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
புன்னக்காயல் ஊர் கமிட்டி தலைவர் ஜோசப், துறைமுக கமிட்டி தலைவர் பிச்சை, சோபியா, சேர்ந்தபூமங்கலம் ஊர் தலைவர்கள் பொன்ராஜ், திருமணி, கைலாசபுரம் ஊர் தலைவர் பெரியசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், ஆத்தூர்குளம் கீழ்பகுதி விவசாயிகள் சங்க தலைவர் அருள்ராஜ் உள்பட நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
இதனால் தூத்துக்குடி– திருச்செந்தூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டன.
பேச்சுவார்த்தைஇதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தியாகராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சீமைச்சாமி (தூத்துக்குடி புறநகர்), திபு (திருச்செந்தூர்), மாதவன் (ஸ்ரீவைகுண்டம்), ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் பயாஸ், தாமிரபரணி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் அண்ணாத்துரை, உதவி பொறியாளர் அரவிந்த் குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உதவி கலெக்டர் தியாகராஜன் கூறுகையில், முக்காணியில் தடுப்பணை கட்டும் பணி 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. தடுப்பணை கட்டுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தி, பொதுமக்களின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்படும்.
முக்காணியில் தடுப்பணை கட்டுவது போன்று, சேர்ந்தபூமங்கலம்– புன்னக்காயல் இடையே தடுப்பணை கட்டுவதற்கு அரசிடம் திட்ட முன்வரைவு வழங்கப்பட்டு உள்ளது. எனவே அரசு அனுமதி அளித்தவுடன் அங்கும் புதிய தடுப்பணை கட்டப்படும் என்று கூறினார்.
போக்குவரத்து பாதிப்புஇதையடுத்து மதியம் 12.45 மணி அளவில் சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். முக்காணியில் திடீர் சாலைமறியல் போராட்டத்தால் சுமார் 3¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.