பவானி அருகே மோட்டார்சைக்கிள்–மொபட் மோதல்: 2 பேர் சாவு


பவானி அருகே மோட்டார்சைக்கிள்–மொபட் மோதல்: 2 பேர் சாவு
x
தினத்தந்தி 19 April 2017 5:15 AM IST (Updated: 19 April 2017 10:47 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் இறந்தனர்.

பவானி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கல்பாவியை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் செந்தில்குமார் (வயது 20). கட்டிட தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த பழனிச்சாமியின் மகன் தம்பிராசு (18). இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். செந்தில்குமாரும், தம்பிராசுவும் உறவினர்கள்.

நேற்று முன்தினம் இரவு சித்தாரில் இருந்து பவானி நோக்கி 2 பேரும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை செந்தில்குமார் ஓட்டினார். பின்னால் தம்பிராசு உட்கார்ந்திருந்தார்.

சாவு

குருப்பம்பாளையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சதீஷ் பிரபுராம் என்பவரின் மொபட்டும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் செந்தில்குமார், தம்பிராசு, சதீஷ் பிரபுராம் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த தம்பிராசு மற்றும் சதீஷ் பிரபுராம் ஆகியோரை மீட்டு ஈரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நள்ளிரவில் தம்பிராசு பரிதாபமாக இறந்தார். மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சதீஷ் பிரபுராம் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story