சிவகங்கையில் அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் போராட்டம்


சிவகங்கையில் அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 19 April 2017 11:30 PM GMT (Updated: 19 April 2017 7:25 PM GMT)

சிவகங்கையில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கத்தினர், நேற்று அரை நிர்வாணத்துடன் கருப்புத்துணி கட்டியும், மண் சட்டி ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட கிளை ஆகியவை சார்பில் மத்திய அரசு தமிழகத்தை பேரிடர் மாநிலமாக அறிவித்து கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும், வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் காத்திருப்பு போராட்டத்தை கடந்த 17–ந்தேதி தொடங்கினர். சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்று வரும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

அரை நிர்வாணம்

இந்தநிலையில் நேற்று 3–வது நாளாக விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். விவசாயிகள் சங்க மாநில தலைவர் குணசேகரன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் சாத்தையா ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமணி, மாவட்ட நிர்வாகிகள் கோபால், முத்துராமலிங்கம், விஸ்வநாதன், ஒன்றிய நிர்வாகிகள் முருகன், சந்திரன், ராஜேஷ், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் விவசாயிகள் மேல்சட்டை அணியாமல் அரை நிர்வாணத்துடன், வாயில் கருப்பு துணி கட்டியும், நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டும், காதில் பூ சுற்றிக்கொண்டும், கையில் மண் சட்டியுடனும் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


Next Story