3 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்துவரும் அவலம்


3 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்துவரும் அவலம்
x
தினத்தந்தி 20 April 2017 4:15 AM IST (Updated: 20 April 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே உள்ள நைனான்கொல்லையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 கி.மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் நைனான்கொல்லை விடுதி ஊராட்சியில் நைனான்கொல்லை கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பயன்பாட்டில் இருந்தன.

இந்த 2 நீர்த்தேக்க தொட்டிகளும் மின் மோட்டார் பழுது மற்றும் நீர்மட்டம் குறைவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செயல் இழந்தன. இது குறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாக அலுவலர்களிடம் இப்பகுதி மக்கள் பலமுறை புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த கிராம மக்கள் கடந்த 3 மாதங்களாக குடிநீர் இன்றி சிரமப்படும் அவநிலை உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

சமையல் மற்றும் முக்கிய தேவைக்காக இப்பகுதிமக்கள் நைனான்கொல்லையில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள வெட்டான்குளம் என்ற பகுதிக்கு சென்று அங்கு வயலுக்கு பாய்ச்சும் நீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த தண்ணீர் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் இதனை பயன்படுத்தும் இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

தினமும் நெடுந்தூரம் நடந்து சென்று தண்ணீர் குடங்களை சுமந்து வருவதால் இப்பகுதி பெண்கள் பெரும் அவதிபடுகின்றனர். எனவே நைனான்கொல்லை கிராமத்தின் குடிநீர் கஷ்டத்தை போக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story