நீட் எதிர்ப்பு குழுவினர் டெல்லி பயணம் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்
நீட் தேர்வு முறையில் இருந்து புதுவைக்கு விலக்கு அளிக்க கோரி டெல்லியில் நாளை நீட் எதிர்ப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதற்காக அவர்கள் டெல்லி சென்று உள்ளனர்.
புதுச்சேரி,
புதுவை நீட் எதிர்ப்பு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சிவ.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கனவு தகர்க்கப்படும்மருத்துவம், பல் மருத்துவம், ஆகிய உயர் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் புதுச்சேரி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற ஏழை, எளிய மாணவர்களின் கனவு தகர்க்கப்படும். சமூக நீதி குழிதோண்டி புதைக்கப்படும்.
நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுவதால் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படிக்கும் புதுச்சேரி மாணவர்களால் இத்தேர்வில் தேர்ச்சிபெற இயலாது. எனவே புதுச்சேரிக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை வேண்டாம், 12–ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படும் சென்டாக் முறையே தொடர வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனால் 500 மருத்துவ இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்காமல் அகில இந்திய அளவில் நிரப்பப்படும். இதனால் புதுச்சேரி மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இதுமட்டுமின்றி நீட் தேர்வு முறை மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் செயலாகும்.
நாளை ஆர்ப்பாட்டம்புதுச்சேரியில் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி உள்ளோம். முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர கோரிக்கை விடுத்தோம். அரசும் இதற்கான சட்ட முன்வரைவை தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் இதில் முடிவு எதுவும் அறிவிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
இந்தநிலையில் புதுச்சேரி அரசின் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க கோரி நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழுவினர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதன்பின் வரும் 23–ந்தேதி முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜெ.பி.நட்டாவை சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி மனு கொடுக்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையொட்டி புதுச்சேரியில் இருந்து நேற்று நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழுவினர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.