வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்தும் பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்


வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்தும் பணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 April 2017 3:45 AM IST (Updated: 20 April 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சியினை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் வாக்காளர்பட்டியல் தொடர்திருத்தம் மற்றும் செம்மைப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்துவதற்கான பயிற்சி முகாம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வருவாய்த்துறை கூட்ட அரங்கில் நடந்தது. பயிற்சியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் வாக்காளர் பதிவு அலுவலரும் நாகர்கோவில் கோட்டாட்சியருமான ராஜ்குமார் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

வீடுவீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியினை மேற்கொண்டு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்த்து, கூடுதல் விவரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும், 18 வயது முடிவடைந்த மற்றும் வேறு இடத்திலிருந்து தற்போது குடிபெயர்ந்து வந்த நபர்கள் யாரேனும் விடுபட்டிருப்பின் அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு முழு விவரங்களையும் சேகரிக்குமாறும், இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை நீக்கம் செய்யவும் பயிற்சி வழங்கப்பட்டது.

வண்ண அடையாள அட்டை

மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம்பெற்றவர்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து அரசு இ–சேவை மையத்தில் இலவசமாக வண்ண அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளலாம். மற்ற வாக்காளர்கள் ரூ.25 செலுத்தி வண்ண அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளலாம். புதிதாக பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய நபர்கள் ஆன்லைன் மூலமாகவோ, அந்தந்த பகுதி தாசில்தார் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள் பணிநிமித்தமாகவோ, தற்காலிகமாகவோ வேறுஇடத்தில் குடியிருந்தால், அவர்கள் தங்கி இருக்கும் இடத்திலேயே வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இப்பயிற்சி முகாமில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அருளரசு, தேர்தல் தனி தாசில்தார் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story