சேலத்தில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலைமறியல்
சேலத்தில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 24–வது வார்டு செவ்வாய்பேட்டை வண்டிக்காரன் தெரு, சிவதாபுரம் செல்லும் பிரதான சாலை போன்ற பகுதிகளில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது என்றும், மேலும் அடிப்படை வசதியான சாக்கடை கால்வாய் வசதி உள்ளிட்டவை செய்து தரப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இது தொடர்பாக சேலம் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சாலைமறியல்இந்த நிலையில் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டிப்பதாக கூறி அப்பகுதி பொதுமக்கள், ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் இணைந்து சேலம் செவ்வாய்பேட்டை குண்டுசெட்டி ஏரியில் இருந்து சிவதாபுரம் செல்லும் பிரதான சாலையில் மூலப்பிள்ளையார் கோவில் அருகில் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். இதில் மாநகர தலைவர் பிரகாஷ், செயலாளர் கணேசன், நிர்வாகிகள் மணி, சிலம்பரசன், ஜெகநாதன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். போராட்டம் காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் ஸ்தம்பித்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைஇது பற்றிய தகவல் அறிந்ததும் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தரப்பில்,‘‘இந்த சாலையில் ரெயில்வே கூட்செட்டில் இருந்து ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன. சாலை மோசமாக இருப்பதால், லாரிகள் செல்லும்போது புழுதி பறக்கிறது. அத்துடன் சாக்கடை கால்வாய் வசதியும் செய்துதரப்படவில்லை. முதல்–அமைச்சரான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே இதுபோன்ற நிலை உள்ளது வேதனைக்குரியது‘‘ என்றனர். பின்னர் மறியலை கைவிட மறுத்ததாக 23 பேரை போலீசார் கைது செய்தனர்.