பெண்கள் எதிர்ப்பை மீறி மதுக்கடைகள் திறந்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் சேலத்தில் ஜி.கே.மணி பேட்டி


பெண்கள் எதிர்ப்பை மீறி மதுக்கடைகள் திறந்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் சேலத்தில் ஜி.கே.மணி பேட்டி
x
தினத்தந்தி 22 April 2017 4:45 AM IST (Updated: 22 April 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

மூடப்பட்ட கடைகளுக்கு மாற்றாக பெண்கள் எதிர்ப்பை மீறி மதுக்கடைகள் திறந்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என்று சேலத்தில் ஜி.கே.மணி தெரிவித்தார்.

சேலம்,

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கும் ‘டாஸ்மாக்‘ மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என பா.ம.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதற்கு காரணமான பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு சேலத்தில் வருகிற 26–ந் தேதி மாலை வெற்றி விழா மற்றும் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

அதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்தது. இதில் மாநில துணைத்தலைவர் கார்த்தி, துணை பொதுச்செயலாளர் அருள், மாவட்ட செயலாளர் கதிர் ராசரத்தினம், சாம்ராஜ், பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் சத்ரியசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:–

புரட்சி வெடிக்கும்

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி மூடப்பட்ட ‘டாஸ்மாக்‘ கடைகளுக்கு பதிலாக மாற்று இடத்தில் மீண்டும் திறக்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு பெண்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளை மதித்து டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது.

பெண்களின் எதிர்ப்பை மீறி மதுக்கடைகளை மீண்டும் திறந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். குஜராத், பீகார், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பூரண மது விலக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்கள் வளர்ச்சி பெற்றுள்ளது.

முழு வறட்சி மாநிலம்

தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. காவிரியில் நீர்வரத்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இதனால் மேட்டூர் அணை ஒரு வாரத்தில் வறண்டு விடும். மேட்டூர் அணையை நம்பி இருக்கும் மேட்டூர் பொதுமக்கள், சேலம் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும். தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.

எனவே, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழக அரசு கேட்ட நிதி அனைத்தையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story