பி.டி.டி. சால் சீரமைப்பு திட்டத்தை விரைந்து முடிக்க குடியிருப்புவாசிகள் ஒத்துழைக்க வேண்டும்


பி.டி.டி. சால் சீரமைப்பு திட்டத்தை விரைந்து முடிக்க குடியிருப்புவாசிகள் ஒத்துழைக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 April 2017 4:08 AM IST (Updated: 23 April 2017 4:07 AM IST)
t-max-icont-min-icon

பி.டி.டி. சால் சீரமைப்பு திட்டத்தை விரைந்து முடிக்க அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் ஒத்துழைக்க வேண்டும் என முதல்– மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை

பி.டி.டி. சால் சீரமைப்பு திட்டத்தை விரைந்து முடிக்க அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் ஒத்துழைக்க வேண்டும் என முதல்– மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.

பூமி பூஜை

மும்பை பரேல், தாதர், நைகாவ் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்கிலேயர் கால பி.டி.டி. சால்கள் உள்ளன. இந்த குடியிருப்புகள் பொது மக்கள் வசிக்க தகுதியற்ற அபாயகரமான நிலையில் உள்ளன. இந்த குடியிருப்புகளை சீரமைக்க நீண்ட காலமாக பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் மும்பையில் உள்ள பி.டி.டி. சால்கள் சீரமைக்கப்படும் என சமீபத்தில் மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த திட்ட பணிகளை தொடங்க மாநில அரசு தீவிரம் காட்டி வந்தது. இந்தநிலையில் பி.டி.டி. சால்கள் சீரமைப்பு திட்டத்திற்கான பூமி பூஜை நேற்று ஒர்லியில் உள்ள ஜாம்போரி மைதானத்தில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ரிமோட் மூலம் சீரமைப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் திட்ட மாதிரியை அறிமுகம் செய்தார்.

ஒத்துழைக்க வேண்டும்

விழாவில் முதல் – மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:–

பி.டி.டி. சால்களில் அதிகளவில் மில் தொழிலாளர், போலீசார் குடும்பங்களே வசித்து வருகின்றனர். போலீசார் நமக்காக 24 மணிநேரமும் உழைத்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு நாம் எதுவுமே செய்யவில்லை. எனவே அவர்களுக்கு புதிய வீடு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பி.டி.டி. சால் சீரமைப்பு திட்டம் இந்தியாவிலேயே மிகப்பெரிய திட்டம். எனவே இதன் முதல் கட்ட பணிகள் முடிய 2 ஆண்டுகள் ஆகும். பொது மக்கள் இந்த திட்டத்தை விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும். இது உங்களுடைய வீடு. எனவே திட்டத்தை விரைவாக முடிக்க நீங்கள் உதவியாக இருக்கவேண்டும்.

சுயநலத்திற்காக தடுத்தனர்

இந்த சீரமைப்பு திட்டத்திற்காக மைதானங்கள், பூங்காக்கள் ஆக்கிரமிக்கப்பட மாட்டது. பி.டி.டி. சாலுக்கு சொந்தமான 32 சதவீத நிலத்தில் மட்டுமே கட்டிடங்கள் கட்டப்படும். திட்டத்தை சீர்குலைக்க சிலர் உங்களை தூண்டி விடலாம். அதை கேட்டு சீரமைப்பு பணிகளுக்கு எதிராக செயல்படவேண்டாம். பி.டி.டி. சால் அமைந்துள்ள பகுதி பொன் விளையும் பூமி போன்றது. நாடு முழுவதும் உள்ள பிரபல கட்டுமான நிறுவனங்களின் கண் இதன் மீது இருந்தது. நீண்டகாலமாக பலர் தங்கள் சுயநலத்திற்காக இதை சீரமைக்க விடாமல் தடுத்துவிட்டனர். பா.ஜனதா அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு மட்டுமே முடிவுகளை எடுக்கும்.

இவ்வாறு முதல் – மந்திரி பேசினார்.

கலந்து கொண்டவர்கள்...

விழாவில் வீட்டு வசதித்துறை மந்திரி பிரகாஷ் மேத்தா, கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே, மந்திரி சுபாஷ் தேசாய், வீட்டு வசதித்துறை இணை மந்திரி ரவீந்திர வாய்க்கர், அரவிந்த் சாவந்த் எம்.பி., மும்பை மேயர் விஷ்வநாத் மகாதேஷ்வர், கேப்டன் தமிழ் செல்வன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல் கட்ட சீரமைப்பு பணிகள் டிலே ரோடு, நைகாவ் பகுதியில் உள்ள பி.டி.டி. சால்களில் நடைபெறும். இதற்கான ஒப்பந்தம் சாப்பூர்ஜீ, பாலோன்ஜீ மற்றும் எல்அன்டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.


Next Story