என்ஜினில் கோளாறு: அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றது


என்ஜினில் கோளாறு: அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றது
x
தினத்தந்தி 24 April 2017 10:15 PM GMT (Updated: 24 April 2017 7:17 PM GMT)

என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றது. இதனால் அந்த ரெயில் 3 மணி நேரம் தாமதமாக பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு வந்தது.

ஆனைமலை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு தினமும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தினமும் காலை 9.50 மணிக்கு பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு வரும். பின்னர் 10.15 மணிக்கு திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு செல்லும்.

இந்த நிலையில் நேற்று காலை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் பாலக்காடு வழியாக பொள்ளாச்சிக்கு வந்து கொண்டிருந்தது. ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது 9.45 மணி அளவில் அந்த ரெயில் மீனாட்சிபுரம் ரெயில் நிலையத்தை தாண்டி 3 கிலோ மீட்டர் தூரம் பெரியபோது அருகே வந்தபோது திடீரென்று ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

3 மணி நேரம் தாமதம்

இதைத்தொடர்ந்து பாலக்காடு கோட்ட ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு, ரெயிலின் மற்றொரு பகுதியில் இணைக்கப்பட்டு, மீண்டும் மீனாட்சிபுரம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கோளாறு ஏற்பட்ட என்ஜின் அகற்றப்பட்டு, வேறு என்ஜின் பொருத்தப்பட்டது.

இதன் பின்னர் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு 3 மணி 10 நிமிடங்கள் தாமதமாக மதியம் 1 மணிக்கு பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு வந்தது. தொடர்ந்து 1.30 மணிக்கு திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றது. ரெயில் என்ஜின் பழுதடைந்ததால் பயணிகள் பலர் மீனாட்சிபுரத்தில் இறங்கி, பஸ் பிடித்து பொள்ளாச்சிக்கு சென்றனர். இதனால் பயணிகள் சிரமப்பட்டனர்.


Next Story