6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்–ஆர்ப்பாட்டம்


6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்–ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2017 4:45 AM IST (Updated: 26 April 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கி, ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

தேனி,

ஊதியக் குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்கள் கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

அதன்படி தேனி மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் 9 இடங்களில் ஆர்ப்பாட்டமும் செய்தனர். மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறையில் 415 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இவர்களில் 173 பேர் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அலுவலகங்கள் வெறிச்சோடின

அதேபோல், ஊரக வளர்ச்சித்துறையில் 525 ஊழியர்களில் 186 பேரும், அங்கன்வாடி பணியாளர்களில் 1,700 பேரில் 695 பேரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வணிக வரித்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பிற துறைகளில் 1,100 ஊழியர்களில் நேற்றைய வேலை நிறுத்தத்தில் 312 பேர் பங்கேற்றனர்.

வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை குறைவாக இருந்தது. சில அலுவலகங்கள் ஆட்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அரசு அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. பல்வேறு பணிகள் காரணமாக அரசு அலுவலகங்களுக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கருவூலங்கள் வெறிச்சோடி காணப்பட்டதால், அங்கு சுயஉறுதிச் சான்று சமர்ப்பிக்க வந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கிய அரசு அலுவலர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் என மொத்தம் 9 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முகமது அலி ஜின்னா, மாவட்ட பொருளாளர் சென்னமராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.


Next Story