தண்ணீர் பிடிப்பதில் தகராறு கல்லூரி ஊழியர் அடித்துக்கொலை


தண்ணீர் பிடிப்பதில் தகராறு கல்லூரி ஊழியர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 27 April 2017 3:30 AM IST (Updated: 27 April 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் பிடிப்பதில் தகராறு காரணமாக கல்லூரி ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

மாமல்லபுரம்,

மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காட்டு குப்பத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 50), திருப்போரூர் ஒன்றிய தி.மு.க. முன்னாள் மீனவரணி செயலாளர், நேற்று முன்தினம் செல்வத்தின் மனைவி மீனாட்சி தனது வீட்டின் அருகில் உள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது மீனாட்சிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராமன் என்பவரது மனைவி தரணி என்பவருக்கும் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதை பார்த்ததும் தரணியின் கணவர் ராமன், மாமனார் தேவன் ஆகியோர் தரணிக்கு ஆதரவாக அங்கு வந்து பேசியதாக தெரிகிறது.

 அப்போது வாய்த்தகராறு முற்றி 3 பேரும் சேர்ந்து மீனாட்சியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த மீனாட்சியின் கணவர் செல்வம், மகன் மணிகண்டன் (25) ஆகியோர் ஓடி வந்து தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தேவன், அவரது மகன் ராமன் இருவரும் சேர்ந்து  செல்வத்தின் மகன் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

3 பேர் கைது

இதில் மயங்கி விழுந்த மணிகண்டனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து  தகவலறிந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, சப்–இன்ஸ்பெக்டர் கமலதியாகராஜன் ஆகியோர் நேரில் சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் அளித்த புகாரின்பேரில் மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூளேரிக்காட்டு குப்பத்தை சேர்ந்த தேவன் (65), அவரது மகன் ராமன்(35), ராமனின் மனைவி தரணி (28) ஆகியோரை கைது செய்தனர். தரணி கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார்  பள்ளியில்  பணியாற்றி வருகிறார்.

கொலை செய்யப்பட்ட மணிகண்டன் நெம்மேலியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. மணிகண்டன் கொலை செய்யப்பட்ட சம்பவம் சூளேரிக்காட்டு குப்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story