கோவையை அடுத்த சூலூரில் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த 6 பேர் கைது


கோவையை அடுத்த சூலூரில் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 28 April 2017 11:45 PM GMT (Updated: 2017-04-29T01:11:45+05:30)

கோவையை அடுத்த சூலூரில் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த 6 பேர் கைது தஞ்சாவூர் போலீசார் பொறி வைத்து பிடித்தனர்

கோவை,

கோவையை அடுத்த சூலூரில் கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த 6 பேரை தஞ்சாவூர் போலீசார் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

போலீசார் மடக்கினர்

கோவையை அடுத்த சூலூர்–திருச்சி ரோட்டில் உள்ள பழைய தாலுகா அலுவலகம் முன்பு உள்ள ஒரு ஓட்டலுக்கு நேற்று இரவு 7.30 மணியளவில் 2 காரில் 6 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து, காரில் ஏற முயன்றனர்.

அப்போது திடீரென்று அங்கு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் ஒரு கார் மற்றும் வேனில் வந்தனர். அதில் இருந்து இறங்கிய போலீசார் அவர்கள் 6 பேரையும் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அதில் ஒருவர் ஓட முயன்றபோது, அவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

6 பேர் கைது

பின்னர் போலீசார் அவர்கள் 6 பேரையும் சூலூர் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள், கோவை சின்னவேடப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (வயது 27), மதன்குமார் (28),கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த தினோப் (33), ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த கண்ணன் (40), இருளாண்டி (30) திருவாரூரை சேர்ந்த சரத்பாபு (38) என்பது தெரியவந்தது.

அத்துடன் அவர்கள் கள்ளத்துப்பாக்கியை விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 6 பேரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அதற்குள் 15 தோட்டாக்கள் இருந்தன. அந்த துப்பாக்கி சுடுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து போலீசார் அவர்கள் 6 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்த கும்பலை பொறி வைத்து பிடித்தது எப்படி? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:–

பலருக்கு துப்பாக்கிகள் விற்பனை

கைதான 6 பேரும் கள்ளத்துப்பாக்கிகளை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பலருக்கு விற்பனை செய்து உள்ளனர். இதை அறிந்த தஞ்சாவூர் போலீசார், அவர்களை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்து அந்த கும்பலிடம் கள்ளத்துப்பாக்கிகளை வாங்குவதுபோன்று நடித்து அவர்களிடம் தொடர்பு கொண்டனர்.

உடனே அந்த கும்பலை சேர்ந்தவர்கள், தங்களிடம் எந்த ரகத்தை சேர்ந்த துப்பாக்கிகளும் கிடைக்கும் என்று கூறினார்கள். அதற்கு போலீசார் எங்களுக்கு கைத்துப்பாக்கி மட்டும் போதும். அதை வாங்க எங்கு வர வேண்டும் என்று கேட்டனர். தற்போது தஞ்சாவூரில் போலீஸ் கெடுபிடி அதிகமாக உள்ளது. எனவே கோவை மாவட்டம் சூலூருக்கு வாருங்கள். அங்குள்ள ஒரு ஓட்டல் அருகே நாங்கள் நிற்போம். எங்களிடம் பணம் கொடுத்துவிட்டு துப்பாக்கியை வாங்கிச்செல்லுங்கள் என்று கூறினார்கள். உடனே போலீசாரும், சூலூருக்கு வர சம்மதித்தனர்.

சுற்றி வளைத்து பிடித்தனர்

அதன்படி கார் மற்றும் வேனில் ஏராளமான போலீசார் துப்பாக்கிகளுடன் சூலூர் வந்தனர். அதில் 2 பேரை மட்டும் போலீசார் அந்த கும்பல் கூறிய ஓட்டலுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அந்த கும்பலை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் துப்பாக்கி காருக்குள் இருக்கிறது. நாங்கள் வந்த காருக்குள் ஏறுங்கள், அங்கே வைத்து துப்பாக்கியை தருகிறோம் என்று கூறினார்கள்.

சாப்பிட்டு முடிந்ததும், அந்த கும்பலுடன் சேர்ந்து வெளியே வந்த போலீசார், இதுகுறித்து மற்ற போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அந்த கும்பலை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தீவிர விசாரணை

கள்ளத்துப்பாக்கியை விற்பதற்காக அந்த கும்பல் ஏன் கோவை மாவட்டம் சூலூரை தேர்வு செய்தனர் என்பது சந்தேகமாக இருக்கிறது. எனவே சூலூரில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்பது குறித்து அவர்கள் 6 பேரின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.

அத்துடன் அவர்கள் சூலூரை சேர்ந்த வேறு யாருக்காவது கள்ளத்துப்பாக்கிகளை விற்பனை செய்து உள்ளார்களா? அவர்களுக்கு கள்ளத்துப்பாக்கி எங்கிருந்து கிடைக்கிறது? இந்த கும்பலில் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story