தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளால் தமிழகம் தண்ணீர் இல்லாத காடாக மாறிவிட்டது
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளால் தமிழகம் தண்ணீர் இல்லாத காடாக மாறிவிட்டது என்று திரைப்பட இயக்குனர் சீமான் கூறினார்.
ராமநாதபுரம்,
தமிழ் திரையுலகத்தின் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த 2008–ம் ஆண்டு ராமேசுவரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் மீது ராமநாதபுரம் மாவட்ட கியூ பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதில் சீமான், அமீர் ஆகியோர் ஆஜராகி வருகின்றனர். கடந்த 13.3.2017 அன்று வழக்கு விசாரணைக்கு சீமான் கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவர் ராமநாதபுரம் கோர்ட்டில் நீதிபதி ராம் முன்னிலையில் ஆஜரானார். அவரின் தரப்பில் வக்கீல் சோமசுந்தரம் வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி பிடிவாரண்டை ரத்து செய்ததுடன் ஜூன் 9–ந்தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.
தண்ணீர் இல்லாத காடுஅதனை தொடர்ந்து கோர்ட்டுக்கு வெளியே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சியும், கடும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. மனிதர்களுக்கே குடிநீர் இல்லாத நிலையில் கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகள் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை கடந்த காலங்களில் ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க. நிலையான குடிநீர் திட்டங்கள் எதையும் செயல்படுத்தாததால் தமிழ்நாடு தண்ணீர் இல்லாத காடாக மாறிவிட்டது.
இப்போதே இந்த அளவு கடுமையாக குடிநீர் பஞ்சம் உள்ள நிலையில், அடுத்த தலைமுறைக்கு குடிநீர் இருக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. அ.தி.மு.க. அரசு நாட்டைப்பற்றி கவலைப்படாமல் உள்கட்சி பிரச்சினையை தீர்ப்பதிலேயே நாட்களை கடத்தி வருகிறது. வறட்சியால் விவசாயிகள் தற்கொலை நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வளவு வறட்சிக்கு மத்தியில் வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் வைத்து மூடும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தது வேடிக்கையாக உள்ளது.
பா.ஜ.க. தூண்டுதல்டி.டி.வி. தினகரன் கைது சம்பவத்துக்கு பின்னணியில் மத்திய பா.ஜ.க. அரசின் தூண்டுதல் உள்ளது என்பதை மறுக்கமுடியாது. அவரின் தொலைபேசி அழைப்புகளை வைத்து அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் பேசிய ஒலிநாடாவை வெளியிட தயாரா?
தேர்தல் ஆணையத்துக்கு பணம் கொடுக்க முயன்றதாக தினகரனை கைது செய்த போலீசார் பணத்தை வாங்க முயன்ற தேர்தல் ஆணைய அதிகாரிகளை கைது செய்யாதது ஏன்? இலங்கை தமிழர்களின் நிலை தற்போதும் மோசமாகத்தான் உள்ளது. அவர்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளனர். கேரள அமைச்சர் மணி தமிழ்ப் பெண்கள் குறித்து இழிவான கருத்தை வெளியிட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.