ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாளை நடக்கிறது


ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 28 April 2017 11:39 PM GMT (Updated: 2017-04-29T05:08:57+05:30)

ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறிஇருப்பதாவது:-

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகர்புறத்தில் 202 மையங்களிலும், கிராமப்புறங்களில் 1,087 மையங்களிலும் முகாம் நடத்தப்பட உள்ளது.

மேலும், செங்கல் சூளைகள், மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள், மாவட்ட, மாநில எல்லை பகுதிகளில் வசிப்பவர்கள், நரிக்குறவர்கள் மற்றும் தொழில் நிமித்தமாக வந்து உள்ள மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் தங்களுடைய 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கும் வகையில் நடமாடும் குழு மற்றும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. முகாமுக்கு தேவையான போலியோ சொட்டு மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

உலக சுகாதார நிறுவனம்

முகாம்களில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், மற்ற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 234 பேர் பணியாற்ற உள்ளனர். இந்த பணிகளுக்கு 97 அரசுத்துறை வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

தமிழக அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்று உள்ளது.

போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்த விதமான பின்விளைவுகளும் ஏற்படாது. எனவே அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்து உள்ளார். 

Next Story