மாணவர்கள் விடாமுயற்சி செய்து வக்கீல் தொழிலில் வெற்றிபெற வேண்டும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு


மாணவர்கள் விடாமுயற்சி செய்து வக்கீல் தொழிலில் வெற்றிபெற வேண்டும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 28 April 2017 11:54 PM GMT (Updated: 28 April 2017 11:54 PM GMT)

மாணவர்கள் விடாமுயற்சி செய்து வக்கீல் தொழிலில் வெற்றிபெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

காலாப்பட்டு,

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கமலக்கண்ணன், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கந்தசாமி வாழ்த்திப் பேசினார்.

விழாவை முதல்- அமைச்சர் நாராயணசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வக்கீல் தொழில் செய்வது சிரமமானது. இந்த தொழிலில் போட்டிகள் மிகவும் அதிகம். எனவே மாணவர்கள் விடா முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும்.

இந்த சட்டக்கல்லூரியில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும். இந்த கல்லூரியை தரம் உயர்த்தவும், இங்கு சட்டப் பள்ளிக்கூடம் (லா ஸ்கூல்) கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர்நீதிமன்றம் அமைக்க வேண்டும்

புதுச்சேரி மாநிலத்தில் உயர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது நம்முடைய கோரிக்கையாக உள்ளது. சிக் கிம் மாநிலத்தில் வருடத்துக்கு 4 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. அந்த மாநிலத்துக்கு என்று உயர்நீதிமன்றம் உள்ளது. அதேபோல் மேகாலயா மாநிலத்தில் வருடத்துக்கு 10 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. அந்த மாநிலத்திலும் உயர்நீதிமன்றம் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் வருடத்துக்கு 40 ஆயிரம் வழக்கு கள் வருகின்றன. ஆனால் இங்கு உயர்நீதிமன்றம் இல்லை. எனவே புதுச்சேரி மாநிலத்தில் உயர்நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

இந்த விழாவில் சட்டக்கல்லூரி முதல்வர் வின்சென்ட் அற்புதம், அனந்தராமன் எம்.எல்.ஏ., புதுச்சேரி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ஜோசப், வக்கீல் ராமலிங்கம் மற்றும் சட்டக்கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். 

Next Story