திருப்பூரில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு


திருப்பூரில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
x
தினத்தந்தி 28 April 2017 11:57 PM GMT (Updated: 2017-04-29T05:27:04+05:30)

திருப்பூரில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு நேற்று நடைபெற்றது.

திருப்பூர்,

திருப்பூர் வடக்கு, தெற்கு, அவினாசி, பல்லடம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்களுக்கான ஆய்வு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. வாகனங்களுக்கான ஆய்வை மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி தொடங்கி வைத்து பேசியதாவது:-

பள்ளி வாகன ஓட்டுனர்களை நம்பித்தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஒப்படைக்கிறார்கள். நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக எந்த விதமான ஒரு விபத்தும் நிகழாமல் வாகனங்களை நிதானமாக ஓட்டி சென்று குழந்தைகளை பள்ளிகளில் விட வேண்டும். அதே போல மாலை நேரங்களில் பள்ளி முடிந்தவுடன் குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் விபத்தில்லாமல் வாகனங்களை சிறப்பாக இயக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வுகள்

பின்னர் பள்ளி வாகனங்களில் ஏறி, அவசரகால வழி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி ஆகியவை சரியாக உள்ளனவா? என்று ஆய்வு செய்தார். அப்போது உதவி கலெக்டர் ஷ்வரன்குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் பழனிசாமி, அரசு பள்ளி ஆய்வாளர் ஆறுமுகம், திருப்பூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சிவகுருநாதன் (வடக்கு), முருகானந்தன் (தெற்கு) ஆகியோர் இருந்தனர். ஆய்வு செய்து முடிக்கப்பட்ட ஒரு சில வாகனங்களுக்கு கலெக்டர் தகுதி சான்றிதழ் வழங்கினார். இந்த ஆய்வு குறித்து போக்குவரத்து அதிகாரி சிவகுருநாதன் கூறியதாவது:-

திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள 151 தனியார் பள்ளிகளை சேர்ந்த 812 வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்த தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் 368 வாகனங்கள் மட்டுமே ஆய்வுக்கு வந்திருந்தன. அந்த வாகனங்களில் படிக்கட்டுகள், புத்தகப்பைகள் வைப்பதற்கு தேவையான இடங்கள், பக்கவாட்டு கண்ணாடி, பிரேக், முகப்பு விளக்குகள் உள்பட 16 வகையான ஆய்வுகளை மேற்கொண்டோம். இவை அனைத்தும் சரியாக இருந்த 283 வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்கி உள்ளோம். 85 வாகனங்களில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததால் அவற்றை சரி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வுக்கு வராத வாகனங்கள் அடுத்த மாதம் (மே) 15 மற்றும் 30-ந்தேதிகளில் ஆய்வு செய்யப்பட உள்ளது. 

Next Story