இரவில் நடக்கும் ‘இரவல் விளையாட்டு’..!


இரவில் நடக்கும்  ‘இரவல் விளையாட்டு’..!
x
தினத்தந்தி 29 April 2017 9:46 AM GMT (Updated: 2017-04-29T15:16:37+05:30)

வருடத்தில் 8 மாதம், இந்திய பெண்கள் ஐஸ் ஆக்கி அணியினருக்கு விடுமுறை காலம்.

ருடத்தில் 8 மாதம், இந்திய பெண்கள் ஐஸ் ஆக்கி அணியினருக்கு விடுமுறை காலம். அந்த சமயங்களில் பள்ளி–கல்லூரி படிப்பு, சொந்த பந்தங்களின் சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற வேலைகளை முடித்துக் கொண்டு குளிர்காலத்தில் நடக்க இருக்கும் பனிப்போருக்கு தயாராகி விடுகிறார்கள். ஏனெனில் டிசம்பர் தொடங்கி மார்ச் மாதம் வரை ஐஸ் ஆக்கி வீராங்கனைகள் ரொம்ப பிசி. இந்தியாவின் குளிர் பிரதேசமான ‘லே’ பகுதியில் உறைந்திருக்கும் ‘குபூக்’ உறைபனி ஏரியை சீரமைத்து, அதில் ஐஸ் ஆக்கி விளையாடுகிறார்கள். அதனால் அந்த 4 மாதங்களும் ‘குபூக்’ ஏரி தான் அவர்களின் உலகம். உறைப்பனி ஏரி, தண்ணீராக உருகிய பிறகே இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள்.

‘‘உறைபனியில் ஆக்கி விளையாடுவது லே, லடாக் பகுதி பெண்களுக்கு கைவந்த கலை. ஆனால் அதுவரை இந்திய ஐஸ் ஆக்கி விளையாட்டில் பெண்களுக்கு என பிரத்யேக அணி கிடையாது. அதனால் 2015–ம் ஆண்டு லே, லடாக் பகுதியை சுற்றியிருக்கும் 50–க்கும் மேற்பட்ட பெண்களை ஒன்றிணைத்து ‘லடாக் உமன் ஐஸ் ஆக்கி பவுண்டே‌ஷன்’ என்ற விளையாட்டு அமைப்பை உருவாக்கினோம். அது இன்று இந்திய பெண்கள் ஐஸ் ஆக்கி அணியாக மாறிவிட்டது’’ என்று சந்தோ‌ஷமாக பேசும் நூர் ஜகான், மலை வாழ் பெண்களை ஐஸ் ஆக்கி வீராங்கனைகளாக மாற்றியவர்.

மலைவாழ் பெண்கள் அதிகமாக அங்கம் வகிக்கும் பெண்கள் ஐஸ் ஆக்கி அணியில் கோல்கீப்பராகவும் இவர் விளையாடுகிறார். இரண்டே ஆண்டுகளில் பல சர்வதேச வெற்றிகளை ருசித்திருக்கும் இவர்களுக்கு வருத்தமும் இருக்கிறது. ஏனெனில் இவர்களிடம் முறையான ஆடுகளமும், விளையாட்டு உபகரணங்களும் இல்லை. அதனால் உறைபனி ஏரிகளை ஆடுகளமாக மாற்றிக் கொண்டு இந்திய ஆண்கள் ஐஸ் ஆக்கி வீரர்களின் விளையாட்டு பொருட்களை இரவல் வாங்கி பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

‘‘ஆக்கி மட்டை, கோல் போஸ்ட், குளிரை சமாளிக்கும் கம்பளி உடைகள், தற்காப்பு கவசங்கள், மருத்துவ பொருட்கள்... என அத்தனை பொருட்களும் இந்திய ஆண்கள் அணியிடமிருந்து இரவலாக பெறப்பட்டவையே. பெண்கள் அணிக்கு என பிரத்யேக விளையாட்டு உபகரணங்கள் இல்லாததால், இந்திய ஆண்கள் அணியிடமிருந்து கடன் வாங்கிகொள்கிறோம். அவர்கள் பகல் நேரங்களில் பயிற்சி மேற்கொண்டால்... எங்களுடைய பயிற்சி பெரும்பாலும் இரவிலே நடைபெறும். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவும், முடிந்த பிறகும்... விளையாட்டு பொருட்களை சரிபார்த்து திருப்பி கொடுத்து விடுகிறோம். எங்களிடம் மைதானம் இல்லை, விளையாட்டு பொருட்களும் இல்லை.... ஆனால் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளை வெல்லும் ஆர்வம் இருக்கிறது. நிச்சயம் வெல்வோம்’’ என நம்பிக்கை வரிகளை தெறிக்கவிடும் நூர் ஜகான், கடந்த வருடம் சீனாவில் நடைபெற்ற ‘சைனீஸ் தைபெய் சாம்பியன்ஷிப்’ போட்டியில், தன்னுடைய அணியினருடன் கலந்து கொண்டிருக்கிறார். இவர்களது விளையாட்டு, திறமையான அணிகளையும் கலங்கடித்திருக்கிறது.

‘‘குபூக்’ ஏரியிலேயே விளையாடி வந்த எங்களுக்கு சர்வதேச போட்டி பெரும் சவாலாக அமைந்தது.  பரந்து விரிந்திருக்கும் ஏரியில் கட்டுப்பாடில்லாமல் விளையாடிவிட்டு... சின்ன கட்டத்திற்குள் விளையாட சொன்னால் எப்படி இருக்கும்..? சொல்லுங்கள்..! அதனால் தடுமாற்றத்துடனே ஆரம்பித்தோம். இருப்பினும் சுதாரித்து கொண்டோம். அந்த போட்டிகளில் நான் கோல் கீப்பராக விளையாடினேன். என்னை நோக்கி வந்த 229 கோல் வாய்ப்புகளில் 193 வாய்ப்புகளை தடுத்து நிறுத்தினேன். மிஞ்சியவை எதிரணியினரின் கோலாக மாறியது. ஒட்டுமொத்த போட்டிகளில் 193 கோல் வாய்ப்புகளை தடுத்து நிறுத்தியதால் சிறந்த கோல் கீப்பருக்கான விருது எனக்கு கிடைத்தது’’ என்று சந்தோ‌ஷப்படும் நூர் ஜகானுக்கு, அணியின் தோல்வியில் வருத்தமும் இருக்கிறது. அதற் காக மத்திய அரசையும், மாநில அரசையும் குறைக்கூறாமல் தாங்களாகவே தீவிர பயிற்சியில் இறங்கிவிட்டனர்.

‘‘சீனாவில் சந்தித்த தோல்வி பல வி‌ஷயங்களை கற்றுக்கொடுத்தது. அதுவரை பள்ளம், மேடாக இருந்த ஏரிப்பரப்பில் தண்ணீரை நிரப்பி சமதள பரப்பாக உறைய வைத்தோம். எங்களுடைய பயிற்சியும், முயற்சியும் மேகாலய அரசுக்கு பிடித்துபோக ஏரி சீரமைப்பிற்காக 3 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கொடுத்து உதவுகிறார்கள். இதனால் ஏரியில் தண்ணீர் நிரப்புவது, சரிசெய்வது, உறைபனியை வலுவாக்குவது என நாங்களே எங்களுடைய பணிகளை பார்த்து கொள்கிறோம். மதியம் 3 மணிக்கு ஆரம்பமாகும் பணிகள், நள்ளிரவு 11 மணி வரை எங்களை உறைய வைத்து விடும். அதற்கு மேல் ஆக்கி பயிற்சிகள் தொடங்கிவிடுகின்றன. காலை விடியலுக்குள் பயிற்சிகளை முடித்துக் கொண்டு விளையாட்டு பொருட்களை சுத்தப்படுத்தி உரியவர்களிடம் சேர்த்து விடுகிறோம். பகல் பொழுதில் சேதமாகியிருக்கும் ஆடுகளத்தை கண்டுபிடிக்கவும், சரிசெய்யவுமே நேரம் சரியாக இருக்கிறது. மீண்டும் மாலையில் விளையாட்டு பொருட்களை இரவல் வாங்குவது, சரிசெய்வது, பயிற்சி மேற்கொள்வது என ஓய்வில்லாமல் சறுக்கிக் கொண்டிருக்கிறோம்.

உறைபனியில் நாங்கள் உறைந்து போகலாம். ஆனால் விளையாட்டு ஆர்வம் உறைந்து போகாது. வீராங்கனைகள் சோர்ந்துபோகையில் ‘குபூக்’ உறைபனி ஏரி, இசைவெள்ளமாக மாறிவிடும். கலாசார பாடல்களும், காஷ்மீரின் பாரம்பரிய பாடல்களும்... எங்களை சுறுசுறுப் பாக்குகின்றன’’ என்று கூறும் நூர் ஜகான் கடந்த மாதம் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய நாடுகள் சந்திப்பு போட்டியில் பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றியையும் சுவைத்தது.

‘‘ஒரே அணி என்பதை விட... ஒரே குடும்பம் என்று தான் சொல்லவேண்டும். 50 பெண்களை கொண்ட இந்த அமைப்பில் 30–க்கும் குறைவானவர்களே ஆக்கி அணியில் விளையாடுகிறார்கள். மீதம்இருப்பவர்கள் ஏரி பராமரிப்பையும், பொருட்களை இரவல் வாங்கி வருவதையுமே பிரதான வேலையாக கொண்டிருக்கிறார்கள். சிலர்... உணவு சமைப்பதற்காகவே அங்கம் வகிக்கிறார்கள். ஸ்டான்சியா சோட்டோ மற்றும் செம்சூ டோல்மா ஆகிய மாணவிகள் பொதுத்தேர்வுகளை தவிர்த்துவிட்டு போட்டியில் பங்கேற்று விளையாடினார்கள். இவர்களது தியாகம் வருங்காலத்தில் நிச்சயம் பேசப்படும். இதுபோல பல பெண்கள் தங்களுடைய குடும்ப உறவுகளையும், குடும்ப வாழ்க்கையையும் தியாகம் செய்துவிட்டு கடுங்குளிரிலும் பயிற்சி மேற்கொள்கிறார்கள். இவை அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும். அந்த நாட்கள் வெகு தொலைவில் இல்லை’’ என்ற நம்பிக்கை வார்த்தைகளோடு முடிக்கும் நூர் ஜகான்... ‘குபூக்’ ஏரியில் உள்ளூர் போட்டிகளையும் ஒருங்கிணைக்கிறார்.

Next Story