1. பகத்சிங்: தேசம் மறந்த மாவீரன்!


1. பகத்சிங்: தேசம் மறந்த மாவீரன்!
x
தினத்தந்தி 29 April 2017 10:33 AM GMT (Updated: 29 April 2017 10:32 AM GMT)

பொதுவெளியில் சொல்லப்பட்டதைத் தாண்டி வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் ஏராளமான உண்மைகள் மறைந்து கிடக்கிறது.

பொதுவெளியில் சொல்லப்பட்டதைத் தாண்டி வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் ஏராளமான உண்மைகள் மறைந்து கிடக்கிறது. தினத்தந்தி வாசகர்களுக்கு அவற்றைத் தோண்டி எடுத்து தருவதே ‘ரகசியமான ரகசியங்கள்’. இத்தொடரில் இதுவரை இந்தியாவின் முதல் மகாத்மாவைப் பற்றி பார்த்தோம். இனி இந்த தேசத்தின் புரட்சி நாயகனான பகத்சிங் வாழ்வில் மறைக்கப்பட்டவற்றைக் காண்போம்.


டுத்தடுத்து குண்டுகள் வீசப்பட்டதுமே இந்தியாவின் நாடாளுமன்றக் கட்டிடம் புகை மண்டலமாக மாறியது. அரைகுறையாக விழித்துக் கொண்டிருந்தவர்கள், அக்கறையாக கவனித்துக்கொண்டிருந்தவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்கள், அலறி துடித்து ஆளுக்கொரு பக்கமாக ஓடினார்கள். உள்ளே உட்கார்ந்திருந்த ஆங்கிலேய அரசின் அதிகாரிகள் குலை நடுங்கிப் போனார்கள்.

எங்குபார்த்தாலும் கூக்குரல்களும், உயிர் பயத்தில் வெளிப்பட்ட உளறல்களும் எதிரொலித்தன. நாடாளுமன்றத்திற்கு உள்ளிருந்தே குண்டுகள் வீசப்பட்டதால் பலர் தலை தெறிக்க வெளியேறினார்கள். கட்டிடத்திற்கு வெளியில் துப்பாக்கிகளோடு காவலுக்கு நின்றிருந்தவர்களும் கலங்கிப்போனார்கள்.

இவ்வளவு கட்டுக்காவலையும் மீறி உள்ளே எப்படி குண்டுகள் போயின என்பது புரியாமல் விழித்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு புகை மூட்டம் விலகியது. குண்டு வீசப்பட்ட இடம் பள்ளமாக இருந்தது. யாரும் உயிரிழக்கவில்லை.

பார்வையாளர் மாடத்தில் நின்றிருந்த பகத்சிங், பி.கே.தத் ஆகிய இருவரும் மந்தகாசப் புன்னகையோடு ‘நாடாளுமன்றத்திற்குள் ஏன் குண்டுகளை வீசினார்கள்?’ என்பதை விளக்கும் துண்டுப்பிரசுரங்களை வீசிக் கொண்டிருந்தார்கள்.  

நெருங்குவதற்கும் பயம்; ஆனால் நெருங்கி பிடிக்காமலும் இருக்க முடியாது. ‘மீண்டும் குண்டுகளை வீசி விடுவார்களோ? துப்பாக்கியால் சுட்டு விடுவார்களோ?’ என்று பதுங்கியபடியே பகத்சிங்கைச் சுற்றி வளைக்க காவல்துறையினர் முயற்சித்தனர்.

போலீசார் பயந்ததைப்போல அவர்கள் எதுவும் செய்யவில்லை. தங்களின் கைத்துப்பாக்கிகளை எடுத்து அங்கிருந்த மேசையின் மீது போட்டார்கள். கைதாவதற்குத் தயாராக இருந்தார்கள். பெருமூச்சு விட்ட காவலர்கள் இருவரையும் கைது செய்தார்கள்.

நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய இளைஞர்கள் அடுத்த நாள் நாடு முழுவதும் பேசு பொருளானார்கள். அதற்கு அவர்கள் சொல்லியிருந்த காரணங்கள் அவர்களை தொழிலாளர்களும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களும் விரும்பும் போராளிகளாக அடையாளம் காண்பித்தது. நாடாளுமன்றத்தில் குண்டு வீச அவர்கள் சொன்ன காரணம் இதுதான்:

‘‘காது கேளாதோருக்கு (ஆங்கிலேய அரசு) உணர்த்த உரத்த குரல் எழுப்புகிறோம். தொழிலாளர்களை நசுக்குவதற்காக ‘தொழில் தாவா சட்டம்’ நிறைவேற்றப்பட்ட நாளில் அதனை எதிர்த்து இத்தாக்குதலை நடத்தியுள்ளோம். நாடாளுமன்றத்தில் குண்டு வீசினோம். ஆனால் உறுப்பினர்களைக் கொல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. நாங்கள் வீசிய குண்டுகள் மனிதர்களைக் கொல்லக் கூடியவை அல்ல. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கவனத்தைத் திருப்பி இந்தியர்களின் உணர்வுகளை அவர்களுக்கு உணர்த்தவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டோம். அநீதியின் அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்டுள்ள ஏகாதிபத்திய அமைப்பை உடைத்தெறிவதே எங்கள் புரட்சியின் நோக்கம். நாங்கள் இழிவான கொடூரச் செயல் புரிபவர்கள் அல்ல’’.

நாடாளுமன்றத்திற்குள் குண்டு வீச திட்டமிட்டபோதே தெளிவாக அவர்கள் முடிவு செய்திருந்தார்கள். ‘ஆளில்லாத இடத்தில்தான் குண்டு போட வேண்டும். உயிர்ப்பலி இருக்கக்கூடாது. தப்பி ஓடக்கூடாது. கைது ஆகிட வேண்டும்’ என்பதே இவர்களின் திட்டம்.

பகத்சிங்கும் அவரது நண்பர்களும் நினைத்ததைப் போலவே நாடாளுமன்றத் தாக்குதல் இங்கிலாந்து வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி ஓங்குக) என்று கைதாகும் போது முழங்கிய வார்த்தைகள் இந்திய இளைஞர்களை ஈர்த்தது. 21 வயதிலேயே சிந்தனையில் தீர்க்கமும் செயலில் திறனும் மிக்க இந்த பகத்சிங் யார்? என்ற கேள்வி தேசம் முழுதும் எழுந்தது.

தேசபக்தி நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் பகத்சிங். கி‌ஷன்சிங்–வித்யாவதி தம்பதியின் இரண்டாவது மகனாக 1907 செப்டம்பர் 28–ந் தேதி பிறந்தவர் பகத்சிங். பழைய இந்தியாவின் லைலாப்பூர் மாவட்டத்தில், பங்கா எனும் அவர் பிறந்த ஊர் இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது.

பகத்சிங் பிறந்தபோது அவரது அப்பாவும் சித்தப்பாவும் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தார்கள். பெரியப்பா அன்றைய தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதிராயுடன் சேர்ந்து போராடியதால் பர்மாவுக்கு ஓராண்டு காலம் நாடு கடத்தப்பட்டிருந்தார். இப்படியான சூழலில் வளர்ந்த பகத்சிங்கிற்கு ரத்தத்திலேயே நாட்டுப்பற்று ஊறிப்போயிருந்தது.

பகத்சிங்கிற்கு 8 வயதானபோது நடந்த நிகழ்வு அவரது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் உலகப்போர் நேரத்தில் இந்திய ராணுவத்தைப் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக செயல்பட வைப்பதற்கு நடந்த முயற்சி தோற்றுப்போய் 141 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதனை மேற்கொண்ட கத்தார் கட்சி எனும் புரட்சி அமைப்புக்கு தலைமை தாங்கியவர் 20 வயதே நிரம்பிய சர்தார்சிங் சராபா.



தூக்குக்கயிற்றை முத்தமிட்ட சர்தார் சிங்கை தன் மனதில் கதாநாயகனாக வரித்துக்கொண்டார் பகத்சிங். அவரது புகைப்படத்தை எப்போதும் சட்டைப்பையில் வைத்திருப்பதை வழக்கமாக்கி கொண்டார்.

அடுத்த சில ஆண்டுகளில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை பகத்சிங்கின் தேசபக்தி ரத்தத்தைச் சூடாக்கியது. 1919–ல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது 12 வயதே நிரம்பிய பகத்சிங் லாகூர் டி.ஏ.வி பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார்.

லாகூரில் இருந்து ஜாலியன் வாலாபாக் சென்ற பகத்சிங், ரத்தம் தோய்ந்த மண்ணை எடுத்து வந்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டார். அதைத் தினமும் கையிலெடுத்து வைத்துக் கொண்டு ‘அந்நிய ஆட்சியை அகற்றியே தீருவேன்’ என்று சபதம் செய்தார்.  

இந்நிலையில் ‘வந்தே மாதரம்’ என்ற சுதந்திர முழக்கத்தை எழுப்புவதற்கு ஆங்கிலேய அரசு தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து பொது இடங்களிலும் போலீஸ்காரர்கள் முன்பும் ‘வந்தே மாதரம்’ என்று முழக்கமிடுவதை விடுதலை வீரர்கள் வழக்கம் ஆக்கி வைத்திருந்தினர்.

தாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று பகத்சிங் நினைத்தார். இரவோடு இரவாக காகிதங்களில் ‘வந்தே மாதரம்’ என்று எழுதி வீதிகளில் உள்ள சுவர்களில் ஒட்டி வைத்து விட்டார்.

பொழுது விடிந்ததும் அதை பார்த்து பதறிய காவல்துறையினர் பரபரவென கிழித்து எறிந்தனர். அவற்றை ஒட்டியவர் பகத்சிங் என்பதைக் கண்டறிந்து காவல்நிலையத்திற்கு இழுத்துபோய் அடித்து உதைத்தனர். சிறுவனாக இருந்ததால் எச்சரித்து அனுப்பிவிட்டனர். இந்த சம்பவம் பகத்சிங்கை பயமுறுத்தவில்லை. மாறாக அவரது தேசபக்தியை இன்னும் கிளர்ந்தெழ வைத்தது.

பள்ளிப்படிப்பை முடித்ததும் லாகூர் நே‌ஷனல் கல்லூரியில் பி.ஏ. படிப்பில் சேர்ந்தார். லாலா லஜபதிராயால் தொடங்கப்பட்ட அந்தக் கல்லூரி, விடுதலைப்போராட்டத்துக்கு வீரர்களை தயார் செய்யும் களமாக இருந்தது. அங்கே பகத்சிங்கிற்கும் புதிய வாசல்கள் திறந்தன.

பாடப்புத்தகங்களைத் தாண்டி பகத்சிங் படித்த வரலாறு, அரசியல், பொருளாதார புத்தகங்கள் அவரது அறிவை விரிவாக்கின. முற்போக்கு சிந்தனைகளும் வெளிநாட்டு புரட்சியாளர்களும் புத்தகங்கள் வாயிலாக அவருக்கு அறிமுகம் ஆகினார்கள். ரஷிய புரட்சியைப் பற்றியும் லெனின் போன்றோர் பற்றியும் அறியக்கூடிய வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது.

இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி, உருது ஆகிய 4 மொழிகளில் எழுதவும், பேசவும் செய்தார். உருது மொழியில் உள்ளம் உருகும் கவிதைகளை படைத்தார். படிப்பைத் தாண்டி தேச விடுதலையும் கம்யூனிச சிந்தனைகளும் அவரை முழுமையாக ஆக்கிரமித்தன. அந்தப் பணிகளுக்காகவே ஊர், ஊராக ஓடிக் கொண்டிருந்தார். கால்கட்டு போட்டுவிட்டால் மகனின் மனசு மாறி விடும் என அவரது பெற்றோர்கள் நினைத்தனர்.

1924–ம் ஆண்டு அவரது தந்தை, பகத்சிங்கிற்கு திருமணம் செய்ய விரும்பி கடிதம் எழுதினார். பகத்சிங் இவ்வாறு பதில் எழுதினார்:

‘‘திருமணத்திற்கு இது அல்ல தருணம். தேசம் என்னை அழைத்துக் கொண்டிருக்கிறது. உடலால், உள்ளத்தால், நீதியால் பணியாற்றுவது என உறுதி பூண்டுள்ளேன்’’.

தந்தை மனம் தளரவில்லை. திருமணத்தை வலியுறுத்தி மீண்டும் கடிதம் எழுதினார். பகத்சிங்கிற்குத் திருமணம் செய்து வைப்பதாக தனது தாயாருக்கு (பகத்சிங் பாட்டிக்கு) உறுதி அளித்திருப்பதாகக் கடிதத்தில் குறிப்பிட்டார்.

பகத்சிங் பதில் உறுதியுடன் இருந்தது. ‘‘உங்களது கடிதத்தைப் படித்து அதிர்ச்சி அடைந்தேன். உங்களது தாயை நீங்கள் கவனித்துக் கொள்கிறீர்கள். ஆனால் 33 கோடி மக்களின் தாயான நமது பாரத அன்னை, எவ்வளவு பெரிய துன்பத்தில் இருக்கிறார். நமது அன்னைக்காக அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டியுள்ளது. தாய்நாட்டின் சேவை எனும் உன்னத லட்சியத்திற்காக எனது வாழ்வை நான் அர்ப்பணிக்கிறேன். எனவே வீடு அல்லது உலக ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதில் எனக்கு எவ்வித ஈர்ப்பும் இல்லை’’.

இப்படி தந்தைக்கு கடிதம் எழுதிவிட்டு, பகத்சிங் லாகூரை விட்டு வெளியேறி விட்டார்.

அதன்பிறகு அவர் எங்கே போனார்? காவல்துறை அதிகாரியைச் சுட்டுக் கொன்றது ஏன்? என்பது போன்ற தகவல்களுடன் அடுத்தவாரம் பார்க்கலாம்.

–ரகசியங்கள் தொடரும்.


பிடித்த  எழுத்தாளர்கள்!

‘கையில் புத்தகம் இல்லாமல் பகத்சிங்கை பார்த்ததே கிடையாது’ என்று அவரது நண்பர் சிவவர்மா பதிவு செய்திருக்கிறார். ஆரம்ப காலங்களில் விக்டர் ஹியூகோ, டால்ஸ்டாய், பெர்னாட்ஷா, தாஸ்தோவஸ்கி, ஹால்கேன் சார்லஸ் டிக்கன்ஸ் ஆகியோரின் நூல்களை விரும்பி படித்தார். கம்யூனிசத்தில் ஆர்வம் ஏற்பட்ட பிறகு மாக்சிம் கார்க்கி, லெனின் போன்றோரின் நூல்களைப் படித்தார்.

தனிமனித ஒழுக்கம்!

போராளிகள் ஒவ்வொருவரும் தனி மனித ஒழுக்கத்தில் இருந்து தவறக்கூடாது என்பதில் பகத்சிங் கண்டிப்பாக இருந்தார். ஒரு நாள் போராளி ஒருவர் குடித்து விட்டு வந்த போது அவரைக் கடுமையாக கடிந்து கொண்டார். அந்த இளைஞன் மன்னிப்பு கேட்டு, குடிப்பழக்கத்தைக் கைவிட்ட பிறகே போராட்ட செயல்பாடுகளில் ஈடுபட பகத்சிங் அனுமதித்தார்.


Next Story