நெல்லை அரசு சட்டக்கல்லூரி விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் பேச்சு


நெல்லை அரசு சட்டக்கல்லூரி விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் பேச்சு
x
தினத்தந்தி 29 April 2017 9:30 PM GMT (Updated: 2017-04-29T19:07:54+05:30)

தனது கட்சிக்காரருக்கு பரிகாரம் கிடைக்க நீதி, போலீஸ் துறையை வக்கீல்கள் தவறாக வழிநடத்தக்கூடாது என்று ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் கூறினார்.

நெல்லை,

தனது கட்சிக்காரருக்கு பரிகாரம் கிடைக்க நீதி, போலீஸ் துறையை வக்கீல்கள் தவறாக வழிநடத்தக்கூடாது என்று ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் கூறினார்.

பட்டமளிப்பு விழா

நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் நேற்று முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக அரசின் சட்ட கல்வி இயக்குனர் சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராஜேசுவரன் வரவேற்றார்.

விழாவில் ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 456 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

சிறந்த வக்கீல்கள்

சட்டப்படிப்பு ஒரு தொழில் கல்வி ஆகும். சட்டக்கல்வியை முடிக்கும் இளம் வக்கீல்களுக்கு அவர்களுடைய பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும். மன தைரியத்தையும், சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும். சென்னை, பெங்களூரு, டெல்லி சட்டக்கல்லூரிகளை தவிர மற்ற கல்லூரிகளில் படிப்பவர்களில் பெரும்பாலானோர் முதல் தலைமுறை வக்கீல்களாகவே இருப்பார்கள். எனவே இவர்கள் மூத்த வக்கீல்களிடம் 2 முதல் 5 ஆண்டுகள் வரை இளம் வக்கீலாக பயிற்சி பெற வேண்டும்.

தொழிலை திறம்பட கற்றுக்கொண்டு களத்தில் இறங்க வேண்டும். குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்று சட்ட ப்படிப்பு பட்டத்தை பெற்று விடலாம். ஆனால் தொழில் செய்ய வரும்போது 100 சதவீதம் நாம் தெளிவடைய வேண்டும். அதன் பிறகு சிறந்த வக்கீலாகவும், நீதிபதியாகவும், பேராசிரியராகவும், சட்ட நிபுணர்களாகவும் வரமுடியும்.

தவறாக வழிநடத்த கூடாது

வக்கீல்களாக இருப்பவர்கள் தங்களை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். ஜனநாயக நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. அந்த சட்டத்தை படித்தவர்கள் சமுதாயத்தில் முன்மாதிரியாக திகழ வேண்டும். அரசு உங்களுக்கு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து சட்டக்கல்வியை அளித்திருக்கிறது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும். மற்றவர்கள் நம்மை பின்பற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

வக்கீல்கள் தங்களது கட்சிக்காரருக்கு பரிகாரம் கிடைக்க போலீஸ் நிலையங்களுக்கு சென்று தவறான வழியில் அணுக கூடாது. நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்யக்கூடாது. நேர்மையாக, உங்களது சட்ட திறமையை பயன்படுத்தி கட்சி காரருக்கு பரிகாரம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில்
மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை
அரசு சட்டக்கல்வி இயக்குனர் தகவல்

தமிழகத்தில் மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு சட்டக்கல்வி இயக்குனர் கூறினார்.

மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள்

நெல்லையில் நேற்று நடந்த அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அரசு சட்டக்கல்வி இயக்குனர் சந்தோஷ்குமார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

கடந்த 3 ஆண்டுகளில் சட்டக்கல்லூரிகளின் மேம்பாட்டுக்கு ரூ.143 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில் வருகிற 2017–18ம் கல்வி ஆண்டில் எம்.எல். சைபர் கிரைம் பாடம் கொண்டு வரப்படுகிறது. நிகர்நிலை பல்கலைக்கழங்கங்களில் 100 மதிப்பெண்களில் 70 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வும், 30 மதிப்பெண்கள் உள்மதிப்பீடு மூலமும் வழங்கப்படுகிறது. இதே நடைமுறை அரசு சட்டக்கல்லூரிகளிலும் வருகிற கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இதுதவிர தமிழகத்தில் மேலும் 3 புதிய அரசு சட்டக் கல்லூரிகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அரசு சட்டக்கல்லூரிகளின் முதல்வர்கள் வின்சென்ட் காமராஜ் (திருச்சி), மனோகரன்(மதுரை), பல்கலைக்கழக பேராசிரியர் எபினேசர் ஜோசப், நெல்லை அரசு சட்டக்கல்லூரி முன்னாள் முதல்வர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் ராமபிரான் ரஞ்சித்சிங் நன்றி கூறினார்.Next Story