வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை 16,385 பேர் எழுதினர் 522 பேர் தேர்வு எழுதவரவில்லை


வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை 16,385 பேர் எழுதினர் 522 பேர் தேர்வு எழுதவரவில்லை
x
தினத்தந்தி 29 April 2017 9:30 PM GMT (Updated: 2017-04-29T23:43:46+05:30)

வேலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்–1–க்கான தேர்வில் 16 ஆயிரத்து 385 பேர் எழுதினர். 522 பேர் தேர்வு எழுத வரவில்லை.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்–1–க்கான தேர்வில் 16 ஆயிரத்து 385 பேர் எழுதினர். 522 பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஆசிரியர் தகுதி தேர்வு


தமிழகம் முழுவதும் நேற்று ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்–1 (இடைநிலை ஆசிரியர் பணி) தேர்வு நடந்தது. இந்த தேர்வு வேலூர் கல்வி மாவட்டத்தில் 28 மையங்களிலும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 12 மையங்களிலும் என மாவட்டத்தில் 40 மையங்களில் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் தாள்–1 க்கான தேர்வு எழுத 16 ஆயிரத்து 907 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 16 ஆயிரத்து 385 பேர் தேர்வு எழுதினர். 522 பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8–30 மணிக்கு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி காலை 8–30 மணிக்கு முன்பே தேர்வர்கள் தேர்வு மையங்கள் முன்பு திரண்டனர். பின்னர் போலீசாரின் சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு


தேர்வறைக்குள் நுழைவுச்சீட்டு மற்றும் நீலம் அல்லது கருப்பு பந்துமுனை பேனா மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது. செல்போன், லேப்–டாப் மற்றும் கணக்கிடும் கருவிகள் போன்றவை தேர்வறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துரைசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மனோகரன் (வேலூர்), பிரியதர்ஷினி (திருப்பத்தூர்) மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு அறைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முன்னதாக ஆசிரியர் தேர்வுக்கு வந்தவர்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். தங்களது கைக்குழந்தைகளை பெற்றோர், உறவினர் பாதுகாப்பில் விட்டு, விட்டு தேர்வறைக்கு சென்றனர். அவர்கள் தேர்வு மைய வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து குழந்தைகளை பார்த்து கொண்டனர்.

தாள்–2 தேர்வு இன்று

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாள்–2 க்கான தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு வேலூர் கல்வி மாவட்டத்தில் 43 மையங்களிலும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 18 மையங்களிலும் என மாவட்டத்தில் 61 மையங்களில் நடக்கிறது.

Next Story