திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளை 11 ஆயிரத்து 351 பேர் எழுதினர்


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளை 11 ஆயிரத்து 351 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 29 April 2017 9:30 PM GMT (Updated: 2017-04-29T23:53:48+05:30)

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளை 11 ஆயிரத்து 351 பேர் எழுதினர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளை 11 ஆயிரத்து 351 பேர் எழுதினர்.

ஆசிரியர் தகுதி தேர்வு

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் எழுத செய்யாறு கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 277 பேர், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 442 என மொத்தம் 11 ஆயிரத்து 719 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வர்களுக்காக செய்யாறு கல்வி மாவட்டத்தில் 8 தேர்வு மையங்கள், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 21 தேர்வு மையங்கள் என மொத்தம் 29 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தகுதி தேர்வு முதல் தாள் எழுதும் தேர்வர்கள் காலை 7–30 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வருகை தர தொடங்கினார்கள். தேர்வர்கள் பலத்த சோதனைகளுக்கு பின்னரே தேர்வு அறைகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறைகளுக்கு 2 பேனாக்கள், நுழைவு சீட்டு ஆகியவற்றை மட்டுமே தேர்வர்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். கால்குலேட்டர், செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்கள், பென்சில் ஆகியவை தேர்வு அறைகளில் அனுமதிக்கப்படவில்லை. தேர்வர்களின் செல்போன், கால்குலேட்டர் போன்ற பொருட்கள் தனி அறையில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணிக்கு முடிந்தது.

11,351 பேர் எழுதினர்

செய்யாறு கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 190 பேர் தேர்வு எழுதினார்கள். 87 பேர் தேர்வு எழுதவில்லை. திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 161 பேர் தேர்வு எழுதினார்கள். 281 பேர் தேர்வு எழுதவில்லை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாளை 11,351 பேர் எழுதினார்கள். 368 பேர் எழுதவில்லை. தேர்வு அறைக்கு ஒரு கண்காணிப்பாளர் என திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1,042 பேர் தேர்வு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையத்துக்கு 2 பறக்கும் படையினர் என 50–க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் சப்–இன்ஸ்பெக்டர் தலைமையின் கீழ் ஒரு பெண், ஆண் போலீஸ், 2 ஊர்க்காவல் படையினர் என 5 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு


 திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வி.டி.ஆர்.எஸ். மேல்நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு மையங்களில் நடந்த தேர்வை ஆய்வு செய்தார்.

தேர்வையொட்டி தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி மற்றும் சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

கைக்குழந்தையுடன்...

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுபவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் என்பதால் அவர்களுடன் வந்தவர்கள் கோடைக்காலத்தில் கொளுத்தும் வெயிலில் கைக்குழந்தைகளுடன் பள்ளியின் மையதானத்தில் காத்திருந்தனர்.

செய்யாறு தேர்வு மையத்தில் ஆவணியாபுரம் கிராமத்தில் இருந்து வந்த மூதாட்டி தனது மருமகள் தேர்வு எழுத பிறந்த 15 நாட்கள் ஆன கைக்குழந்தையுடன் கொளுத்தும் வெயிலில் காத்திருந்ததும், தேர்வு எழுத வந்த மகளுக்காக தாய் 3 மாத கைக்குழந்தை வைத்து கொண்டிருந்தது நெகிழ்ச்சி அடைய வைத்தது.

இதேபோல் பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் பெண்களின் கைக்குழந்தைகளை அவர்களின் உறவினர்கள் வைத்திருந்தனர்.

 இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆசிரியர் தகுதி தேர்வு 2–ம் தாள் நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 504 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

Next Story