சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பைகளால் பரபரப்பு


சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பைகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 April 2017 9:30 PM GMT (Updated: 29 April 2017 6:51 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் கிடந்த 3 மர்ம பைகளால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த வெடிகுண்டு சோதனை காரணமாக உள்நாட்டு விமான நிலையத்தின் 4–வது நுழைவு வாயில் ஒரு மணி நேரத்துக்கு மூடப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதி 4–வது நுழைவு வாயில் அருகே நேற்று அதிகாலை கருப்பு மற்றும் பிரவுன் நிறம் கொண்ட 2 பைகள் நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தன.

இதைக்கண்ட மத்திய தொழிற்படை போலீசார் மற்றும் விமான நிலைய போலீசார் அந்த பைகளில் வெடிகுண்டுகள் ஏதும் இருக்குமோ என சந்தேகப்பட்டனர். உடனே போலீசார் இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் விரைந்து வந்து அப்பகுதியில் தடுப்பு ஏற்படுத்தினர். பின்னர் அங்கிருந்த மர்ம பைகளை சோதனை செய்தனர். இதில் அந்த பைகளில் வெடிகுண்டுகள் எதுவுமில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

ஊறுகாய் பாட்டில்கள்

பின்னர் பைகளை போலீசார் திறந்து பார்த்தபோது அதில் துணிகள் மற்றும் ஊறுகாய் பாட்டில்கள் இருந்தன. விமானத்தில் ஏற வந்த பயணி யாராவது விட்டு சென்று இருக்கலாம் என தெரியவந்தது.

இதேப்போன்று விமான நிலையத்தின் கார்கள் நிறுத்துமிடத்தில் கேட்பாரற்று கிடந்த மற்றொரு பையை போலீசார் திறந்து பார்த்தபோது, அதில் துணிகள் இருந்தன. பின்னர் 3 பைகளையும் போலீசார் விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைத்தனர்.

4–வது நுழைவு வாயில் மூடப்பட்டது

இதன்காரணமாக 4–வது நுழைவு வாயில் சுமார் 1 மணி நேரம் மூடப்பட்டு பயணிகள் மாற்று நுழைவு வாயில் மூலமாக அனுமதிக்கப்பட்டனர்.

மர்ம பைகளால் விமான நிலையத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story